மின் கட்டணம் குளருபடி…உயரதிகாரிகள்குழப்பம்……?
பாளையங்கோட்டை அருகே டீக்கடைக்கு மின் கட்டணமாக ரூ.61 ஆயிரம் வந்திருப்பது, உரிமையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கீழப்புத்தனேரியை சேர்ந்தவர் பூபதிராஜா. இவர், திருநெல்வேலி – தூத்துக்குடி 4 வழிச்சாலையில் பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகே வசவப்பபுரத்தில் உணவகம் நடத்தி வருகிறார். இந்த கடைக்கு 2 மின் இணைப்புகள் பெற்றிருந்தார். கடந்தாண்டு இறுதியில் மேலும் ஒரு மின் இணைப்பு பெற்று டீக்கடையும் நடத்தி வருகிறார். இந்த மின் இணைப்புக்கு கடந்த 8 மாதமாக மின் கட்டணம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 22-6-2023ல் அளவீடு செய்யப்பட்ட போது மின் கட்டணமாக ரூ.40 ஆயிரம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பூபதிராஜா, இதுகுறித்து வல்லநாடு மின்வாரிய அலுவலரிடம் நேரில் சென்று விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு அதிகாரிகள் டெபாசிட் பணத்தை கழித்து விட்டு நீங்கள் ரூ.26 ஆயிரம் மட்டும் கட்டுங்கள் என்று கூறியுள்ளனர். இதன் காரணமாக வேறு வழியின்றி மின்கட்டண தொகையை செலுத்தியுள்ளார்.இந்நிலையில் 23-8-23ல் மின்கட்டணம் எடுக்க வந்த மின்வாரிய ஊழியர், மீட்டரை அளவீடு செய்து விட்டு டீக்கடைக்கு மட்டும் ரூ.61 ஆயிரம் கட்டணமாக வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் அதிர்ச்சிக்குள்ளான பூபதிராஜா, வல்லநாட்டில் உள்ள மின்வாரிய அலுவலரிடம் சென்று விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள மின்வாரிய உயரதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்..