
திருவனந்தபுரம்:
சிகிச்சை, பரிசோதனை, மீண்டும் சிகிச்சை என்று கடும் போராட்டத்திற்கு பின் கொரோனாவிலிருந்து 48 நாட்களுக்கு பின்னர் மீண்டு வந்துள்ளார் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர்.
கேரளாவில் 20 முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்த பெண் 48 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வைரசில் இருந்து முழுமையாக குணமடைந்த சம்பவம் நடந்து உள்ளது.
இதற்கிடையில், கடந்த 48 நாட்களில் 20 முறை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்த பெண்ணுக்கு கடந்த இரண்டு பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ராணி என்ற கிராமத்தை சேர்ந்த ஷெர்லி அப்ரகாம் (62) என்ற பெண் கொரோனா அறிகுறியுடன் கடந்த மார்ச் 8-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஷெர்லியின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி படுத்தினர்.
இதையடுத்து அவர் கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
வழக்கமாக கொரோனா பாதிக்கப்பட்டவர் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் 15 முதல் 20 நாட்களில் வைரசில் இருந்து முழுமையாக குணமடைவது வழக்கம்.
ஆனால், ஷெர்லியின் விவகாரம் சற்று விநோதமானது.
மார்ச் 8-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு இத்தனை நாட்களில் சிகிச்சையின் போது இதுவரை 20 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஒவ்வொரு முறை பரிசோதனை செய்யும் போதும் கொரோனா பாசிட்டிவ் என்று மட்டுமே முடிவுகள் வந்தது.
அதாவது 20 முறை நடத்தப்பட்ட சோதனையிலும் கொரோனா பாசிட்டிவ் என்றே முடிவு வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் ஷெர்லிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் சில மாற்றங்களை கொண்டு வந்தனர்.
இதையடுத்து ஷெர்லி ஆப்ரகாமிற்கு கடந்த இரண்டு முறை 21, மற்றும் 22-வது முறைகள் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகள் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதால் மருத்துவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதனால் மகிழ்ச்சியடைந்த மருத்துவர்கள் ஷெர்லியை கொரோனா வார்டில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து 14 நாட்கள் தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
20 முறை கொரோனா பாசிட்டிவ் என வந்த பெண் 48 நாட்கள் கேரள மருத்துவ ஊழியர்கள் மேற்கொண்ட தொடர் சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள சம்பவம் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.















