புதுக்கோட்டை–அள்ளிச் சுருட்டும் மண், மணல் மாஃபியாக்கள் !

தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்தே மண், மணல் விவகாரத்துக்கும், அதில் நிலவும் சர்ச்சைகளுக்கும் குறைவே இல்லை. ‘அதிரடி ரெய்டுகள், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன், சம்மனை எதிர்த்துமேல்முறையீடு, ஆட்சியர்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி’ எனத் தொடர் சர்ச்சைப் புயலுக்குள் சிக்கியிருக்கிறது மண், மணல் விவகாரம். ‘சட்டவிரோத கல்குவாரிகளால் இயற்கை வளங்கள் கொள்ளைபோவதாக… ஆறுகளிலிருந்து அநியாயமாக மணல் அள்ளிக் கடத்தப்படுவதாக’ மாதத்துக்கு ஒரு போராட்டமாவது தமிழகத்தின் எல்லா மூலைகளிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.இந்தப் பிரச்னைகளுக்கு நடுவேதான் ‘கனிம வளக் கொள்ளையைத் தடுக்கக் கோரி’ தொடர் போராட்டங்களை நடத்திவந்த, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி, லாரி ஏற்றிக் கொல்லப்பட்டிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் என எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் ஜகபர் அலியின் படுகொலைக்குக் கடும்கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறார்கள்.