fbpx
Others

சென்னையில் நடைபெற்ற SDPI கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்…

SDPI கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் இன்று (பிப்.10) சென்னையில் நடைபெற்றது. மாநில செயலாளர் ஹமீத் ஃப்ரோஜ் வரவேற்புரையாற்ற, மாநில செயற்குழு உறுப்பினர் ரஷீத் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி, தேசிய செயலாளர் யாமுகைதீன், தேசிய பொருளாளர் அப்துல் சத்தார், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், வழ.காலிதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் அப்துல் ஹமீது, அச.உமர் பாரூக், மாநில பொதுச் செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அகமது நவவி, அபூபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், மாநில அமைப்புபொதுச்செயலாளர் நஸ்ருதீன், மாநிலச் செயலாளர்கள் ஷபீக் அஹம்மது, நஜ்மா பேகம், வழ.ஹஸ்ஸான், பாஸ்டர் மார்க், மாநில பொருளாளர் முஸ்தபா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.இந்த கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள கட்சியின் பூத் கமிட்டிகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. எஞ்சியுள்ள பூத் கமிட்டிகளை விரைவில் அமைத்து முடிப்பது, ஏற்கனவே அமைக்கப்பட்ட பூத் கமிட்டிகளுக்கான தேர்தல் பணிகளை பூத் வாரியாக மேற்கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.*தீர்மானங்கள்:*    1.) ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்தின் மீதான திட்டமிட்ட புறக்கணிப்பு கண்டிக்கத்தக்கது*ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எவ்வித புதிய திட்டங்களையும், குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கீடுகளையும் மேற்கொள்ளாத ஒன்றிய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை இச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்நடவடிக்கை வெறும் மாற்றாந்தாய் மனப்பான்மை மட்டுமின்றி, திட்டமிட்ட அரசியல் பழிவாங்கலாகவே உள்ளது.புதிய மெட்ரோ ரயில் அனுமதி மற்றும் விரிவாக்கம், ரயில்வே திட்டங்கள், சாலை விரிவாக்கம், துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட எந்த முக்கிய உட்கட்டமைப்பு அறிவிப்பும் தமிழ்நாட்டுக்கு இல்லை. வரிகள் மூலம் தமிழக மக்களிடமிருந்து பெறும் பணத்தைப் பயன்படுத்தி, வளர்ச்சித் திட்டங்களை மறுப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பும், சம நீதியும் உறுதி செய்யப்பட வேண்டும் என இச் செயற்குழு வலியுறுத்துகிறது. 2 ) நிலுவையிலுள்ள வாக்குறுதிகளையும் தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்*அரசு ஊழியர்களின் நலன் சார்ந்த ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிய தமிழக அரசிற்கு இச்செயற்குழு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், தொடர்ச்சியாக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக நிறைவேற்றிடவும் தமிழக அரசை எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது.அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மட்டுமின்றி, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் கோரிக்கைகளையும், இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்புவது, புதிய பணியிடங்களை உருவாக்குவது ஆகியவற்றையும் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. 3) இந்தியஇறையாண்மை யையும், விவசாயிகள் நலனையும் அடகு வைக்கும் அமெரிக்க வர்த்தகஒப்பந்தம் அமெரிக்காவுடன் இந்திய அரசு மேற்கொண்டு வரும் வர்த்தக ஒப்பந்தமானது, இந்திய விவசாயிகள் மற்றும் உள்நாட்டுத் தொழில்துறையினரின் நலன்களை மொத்தமாக அடகு வைக்கும் ஒரு முயற்சியாகும். இந்தியாவை மிரட்டும் தொனியில் அமெரிக்கா அளித்து வரும் அழுத்தங்களுக்கு மோடி அரசு பணிந்து போவது, இந்திய நாட்டின் இறையாண்மைக்கே விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக எஸ்டிபிஐ கட்சி கருதுகிறது.குறிப்பாக, இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 3% சதவீதத்திலிருந்து 18% சதவீதமாக அமெரிக்கா அதிரடியாக உயர்த்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை ஒரு ‘ராஜதந்திர நடவடிக்கை’ என மோடி அரசு மெச்சுவது, இந்தியத் தொழில்துறையினருக்குச் செய்யும் துரோகமாகும்.அதேவேளையில், அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு 0% இறக்குமதி வரி சலுகை அளிப்பதன் மூலம் இந்தியச் சந்தையை அமெரிக்காவிற்குத் திறந்துவிடுவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய முடிவுகள் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு அழித்துவிடும். எனவே, அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமல், இந்திய விவசாயிகளையும் தொழில்துறையினரையும் பாதுகாக்கும் வகையில் தனது வர்த்தகக் கொள்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.4.)அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மாவின் வெறுப்பு நடவடிகைக்கு கடும் கண்டனம்! அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகத் தொடர்ந்து வெறுப்புணர்வோடு செயல்பட்டு வருவதை இந்த செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. குறிப்பாக, சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் சிறுபான்மையினரை இலக்காகக் கொண்டு வன்முறையைத் தூண்டும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருப்பது, ஒரு மாநில முதல்வரின் அரசியலமைப்புச் சட்ட கடமைக்கு எதிரானதாகும். இது வெளிப்படையான ‘இன அழிப்பு’ அழைப்பாகும். இத்தகைய நடவடிக்கைகள் மக்களிடையே தேவையற்ற அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் உருவாக்கும்.எனவே, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பில் இருந்துகொண்டு வன்முறைக்கு வித்திடும் அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது.5.) நீண்டகால முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு பரோல் வழங்க வேண்டும்! தமிழக சிறைகளில் பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள், புனித ரமலான் மாதத்தில் முழுமையாக நோன்பு கடமைகளை நிறைவேற்ற உதவும் வகையில் அவர்களுக்கு 3 மாத கால பரோல் விடுப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. சிறைவாசிகளின் நலன் மற்றும் அவர்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த விவகாரத்தில் கனிவுடன் செயல்பட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது.

Related Articles

Back to top button
Close
Close