fbpx
Others

வங்கதேசம் புதிய அரசு பதவியேற்பு..,முகமது யூனுஸ் வங்கதேச அதிபர்ஆனார்.,

புதிய அரசின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் முகமது யூனுஸ்
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டபிறகு, அமைந்த புதிய இடைகால அரசின் தலைவராக பேராசிரியர் முகமது யூனுஸ் பதவியேற்றுக்கொண்டிருக்கிறார்.போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு ஏற்ப வங்கதேச அதிபர், ராணுவத் தளபதி என அனைவராலும் புதிய அரசின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் முகமது யூனுஸ் யார்? அவரின் பின்னணி என்ன?
ஏழைகளின் வங்கியாளர், நோபல் பரிசு வென்ற பேராசிரியர், எளியமக்களின் தொழிலதிபர் என வங்கதேச மக்களால் பல்வேறு அடைமொழிகள் வைத்து அழைக்கப்படும் நபர்தான் முகமது யூனுஸ். இந்த புகழ்மொழிகளுக்குப் பின்னர் மிகப்பெரிய வரலாறு ஒன்றும் இருக்கிறது. 1940-ம் ஆண்டு வங்கதேசத்தின் சிட்டகாங் நகர் அருகிலுள்ள பத்துவா கிராமத்தில் பிறந்த முகமது யூனுஸ் இளம் வயது முதலே பிறருக்கு உதவும் நோக்கம் கொண்டவராக இருந்து வந்திருக்கிறார். பள்ளிப்படிப்பை சொந்த ஊரில் முடித்த யூனுஸ், தலைநகர் டாக்காவில் பொருளியல் பட்டப்படிப்பையும், அமெரிக்காவின் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படிப்பையும் முடித்தார். அதன்பின்னர், அமெரிக்காவிலுள்ள மிடில் டென்னஸி பல்கலைக்கழகத்திலும், சிட்டகாங் பல்கலைக்கழகத்திலும் பொருளியல்துறைப்(Economics)பேராசிரியராகப்பணியாற்றினார்.அதன்பின்னர், வங்கதேசத்துக்குத் திரும்பிய யூனுஸ், தன்நாட்டிலுள்ள ஏழை மக்கள் குறிப்பாக குடும்பப் பெண்களுக்கு கடனுதவி வழங்கும் வகையில் `கிராமின்’ என்ற மைக்ரோ ஃபைனான்ஸ் வங்கியைத் 1983-ல் தொடங்கினார். அதன்மூலம் ஏழைப் பெண்களில் 90%-க்கும் அதிகமானோர் பயன்பெற்றனர். நூற்றுக்கணக்கான பெண்கள் சுயதொழில் தொடங்கி சொந்தக்காலில் நின்று சாதித்தனர். தொடர்ந்து இந்த வங்கிக்கடன் மூலம் விவசாயிகள்,மீனவர்கள், கைத்தறி நெசவாளர்கள், தொழிலாளர்கள் என பல வர்க்கத்தினரும் தங்களின் தொழிலை மேம்படுத்திக்கொண்டனர். அதேபோல வாங்கியக் கடனை முறையாக திருப்பி கட்டினர்.ஏழைகளுக்கு கடன் கொடுக்கும் யூனுஸின் `கிராமின்’ வங்கித் திட்டம் வங்கதேச நாட்டைத் தாண்டி உலகளவில் பிரசித்திபெற்றது. வறுமை ஒழிப்புக்கானசிறந்தஎடுத்துக்காட்டு என உலக பொருளாதார அறிஞர்கள் பாராட்டு தெரிவித்தனர். இதையடுத்து, ஏழை எளிய மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துகாக உழைத்த முகமது யூனுஸுக்கும், அவரின் கிராமின் வங்கிக்கும் 2006-ம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதில் கிடைத்த பரிசுத் தொகையை ஏழை மக்களின் ஊட்டச்சத்து, கண் சிகிச்சை போன்ற மருத்துவ திட்டங்களுக்காக வழங்கினார் முகமது யூனுஸ். இதனால் அவர் `ஏழைகளின் வங்கியாளர்’ என்று அழைக்கப்பட்டார். தொடர்ந்து யூனுஸின் புகழ் நாடு முழுவதும் கொடிகட்டிப் பறக்க அவருக்கு வங்கதேச அதிபர் விருது, ரமன் மகசேசே விருது, மனிதாபிமான சேவை விருது, அன்னை தெரசா விருது, காந்தி அமைதிப் பரிசு என சுமார் 50-க்கும் மேற்பட்ட விருதுகள் அடுத்தடுத்து வந்து குவிந்தன.
முகமது யூனுஸ்

   < முகமது யூனுஸ்
அதேசமயம் விமர்சனங்களும் ஊழல் குற்றச்சாட்டுகளும் கூட அவர்மீது சுமத்தப்பட்டன. குறிப்பாக, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, `அவரொன்றும் ஏழைகளின் வங்கியாளரல்ல; அதிக வட்டி வாங்கி ஏழைகளின் ரத்தம் உறிஞ்சும் வங்கியாளர்’ என விமர்சனம் செய்தார். தொடர்ந்து, முகமது யூனுஸ் வரி ஏய்ப்பு செய்ததாகவும், கட்டாய ஓய்வு பெறும் வயதைத் தாண்டியும் கிராமின் வங்கியில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு அரசால் பணிநீக்கமும் செய்யப்பட்டார். மேலும், தொழிலாளர் சட்டங்களை மீறியதாகவும், வங்கதேச அரசியல்வாதிகள் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு சிறைதண்டனைகூட விதிக்கப்பட்டது. பின்னர் ஜாமீனில் வெளிவந்தவர் வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றிவந்தார். குறிப்பாக, முகமது யூனுஸ் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தங்கி மருத்து சிகிச்சை பெற்றுவந்தபோதுதான் வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் வெடித்தது.பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலைப்போரில் களம் கண்ட வங்கேதச தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற பிரதமர் ஷேக் ஹசினாவின் அறிவிப்பால் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. `இட ஒதுக்கீட்டு முடிவை கைவிட வேண்டும், பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலக வேண்டும்’ எனக் கோரி மாணவர்கள், எதிர்கட்சியினர் நடத்திய வன்முறைப் போராட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பிரதமர் ஹசினாவின் இல்லம் சூறையாடப்பட்டதோடு, அவரின் தந்தையும் வங்கதேசம் உருவாகக் காரணமான ஷேக் முஜிபுர் ரகுமானின் சிலைகளும் உடைத்தெறியப்பட்டன. எல்லைமீறிப்போன போராட்டத்தின் விளைவால் பிரதமர் ஷேக் ஹசினா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவுக்கு தப்பிவந்து தஞ்சமடைந்தார்.
ஷேக் ஹசீனா - Sheik Hasina

 ஷேக் ஹசீனா – Sheik Hasina  >

அந்தநிலையில், வங்கதேச அதிபர் முகமது சஹாபுதீன் ஏற்கெனவே ஹசினா தலைமையில் இருந்த நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய இடைக்கால அரசு பதவியேற்கும் என அறிவித்தார். அதைத்தொடர்ந்து வங்கதேச இந்த நிலையில் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான், இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர் தலைவர்கள், எதிர்கட்சியினர், கலிதா ஜியா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர். அந்தவகையில், போராட்டகாரர்கள் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் புதிய அரசு அமைக்கப்படவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட ராணுவம், வங்கதேசத்தின் புதிய இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸை அறிவித்தது.

முகமது யூனுஸ்

இந்தநிலையில், பிரான்ஸிலிருந்து வங்கதேசத்திற்கு திரும்பிய முகமது யூனுஸ், வங்கதேச அதிபரையும், ராணுவ தளபதியையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர், புதிய இடைக்கால அரசில் மாணவர் போராட்ட அமைப்பினர், பெண்கள், மத சிறுபான்மையிர் ஆகியோர் அடங்கிய 16 பேர் கொண்ட ஆலோசனைக்குழுவை அமைத்தார். அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு வங்கதேச அதிபர் இல்லத்தில் புதிய இடைக்கால அரசு பதவியேற்கும் விழா நடத்தப்பட்டது. வங்கதேச அதிபர் சஹாபுதீன் பதவியேற்பு பிரமாணம் செய்து வைக்க, வங்கதேசத்தின் புதிய இடைக்கால அரசின் தலைவராக, தலைமை ஆலோசகராகப் பதவியேற்றுக்கொண்டிருக்கிறார் முகமது யூனுஸ். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close