பிரதமர் மோடி–இண்டியா கூட்டணி கண்டிப்பாக துடைத்தெறியப்படும்….
கன்னியாகுமரியில் நேற்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்துக்குச் சென்ற பிரதமர், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:குமரி முதல் காஷ்மீர் வரை பாஜக அலை வீசுகிறது. திமுக, காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தி, மீண்டும் பாஜக ஆட்சியமைப்போம்.இண்டியா கூட்டணியால் தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் இருக்காது. ஆட்சிக்கு வந்து கொள்ளையடிப்பதுதான் அவர்களது இலக்கு.பாஜக ஆட்சியில் நாடு முன்னேற்றமடைந்து வருகிறது. ஆனால், ஹெலிகாப்டர் ஊழல், கனிமவள ஊழல் என நீளமான ஊழல் பட்டியல்தான் இண்டியா கூட்டணியில் உள்ளவர்களிடம் இருக்கிறது.குமரி எப்போதும் பாஜகவுக்கு ஆதரவளித்து வருகிறது. பல்வேறு தொலைநோக்குத் திட்டங்கள்குமரி தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் துறைமுக வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது.திமுக தமிழக பண்பாட்டின் எதிரி.நமது பாரம்பரியத்தின் எதிரி. அயோத்தி ராமர் கோயில்கும்பாபிஷேக நிகழ்ச்சியைக்கூட தமிழக மக்கள் பார்க்கவிடாமல் தடுத்ததால், உச்ச நீதிமன்றமே தமிழக அரசைக் கண்டிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், தமிழக பண்பாட்டை பாஜக பாதுகாத்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் தடை விதித்து, அழிக்க முயன்றன. ஆனால், தடையை நீக்கி, மீண்டும் ஜல்லிக்கட்டை கொண்டுவந்தது பாஜக. மோடி இருக்கும்வரை தமிழகப் பாரம்பரியத்தை யாராலும் அழிக்க முடியாது. தமிழகத்தின் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் பாதுகாக்க என்றும் துணையாக நிற்பேன். இது மோடியின் உத்தரவாதம்.குமரியில் பாஜகவுக்கு இருக்கும் ஆதரவைப் பார்த்து டெல்லியில் இருப்பவர்களுக்கு தூக்கம் கெட்டுவிட்டது. உங்கள் அன்பும், ஆதரவும்,பாசமும் மொத்த இந்தியாவுக்கும் பலம் சேர்க்கின்றன.இண்டியா கூட்டணியினர் தமிழகமக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இலங்கையில் நமது மீனவர்கள் தூக்கிலிடப்பட்டபோது, நான் தலையிட்டு, எவ்வித சேதாரமும் இல்லாமல், மீனவர்களை பாதுகாப்புடன் தாயகத்துக்கு அழைத்து வந்தேன்.இதுபோன்ற சில அடிப்படைத் துயரங்களுக்கு வித்திட்டது திமுகவும், காங்கிரஸும்தான். மக்கள் மீது புழுதியை வாரி இறைத்துவிட்டு, தங்களின் நலனில் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறார்கள். திமுகவும், காங்கிரஸும் செய்த பாவங்களுக்கு பதில் சொல்லியே தீரவேண்டும்.மத்திய பாஜக அரசு, மகளிர் முன்னேற்றத்துக்கான அரசு. அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசு. ஆனால், இண்டியா கூட்டணி, பெண்களை அவமரியாதை செய்கிறது. உங்களுடன் தமிழில் பேசமுடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு உள்ளது. இனி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உங்களுடன் தமிழில் பேசுவேன். `நமோ இன் தமிழ்` செயலி மூலம் நீங்கள் எனது குரலை, அதே உணர்வுடன் தமிழில் கேட்கலாம். பிற மாநில மொழிகளிலும் நான் பேசுவதைக் கேட்கலாம். இவ்வாறு மோடி பேசினார்.முதலில் ‘‘என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம்’’ என்று தமிழில் உரையைத் தொடங்கிய பிரதமர், தொடர்ந்து இந்தியில் பேசினார். கூட்டத்தில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் எம்.ஆர்.காந்தி,நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான் பாண்டியன், நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா,முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.