சோமையம்பாளையத்தில் மயான இடத்தில் தார் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு..


கோவை மாவட்டம் சோமையம்பாளையம் ஊராட்சி மற்றும் சுல்தானியபுரம் பகுதியை சுற்றி சுமார் மூவாயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் இறந்தவர்களை புதைக்கவும், தகனம் செய்யவும் புல எண்- 12/2 இல் உள்ள மயானத்தை அப்பகுதி மக்கள் பல வருடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மயானத்தின் அருகில் நீர் வழிப்பாதை அமைந்துள்ளது. இந்த மயானத்தின் அருகில் சில தனிநபர்களின் நிலங்கள் உள்ள காரணத்தினால், தங்களின் சொந்த இலாபத்திற்காக நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து சாலை அமைக்கும் பணியில் சம்பந்தபட்ட அதிகாரிகளின் அனுமதியீன்றி ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது, மயானத்தின் அருகில் தனி நபர்களின் இடம் உள்ள காரணத்தால் நீர்வழிப்பாதையை மறைத்து சாலை அமைத்து மயானத்திற்கு செல்ல முடியாத நிலையை ஏற்படுத்த முயல்வதாகவும், பொதுமக்களாகிய நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தும் சாலை அமைக்கும் பணி கைவிடப்படவில்லை என்றும், நீர்வழிப்பாதை, நீர் நிலைகள் இவற்றை தடை செய்கின்ற வகையில் எந்த பணிகளும் நடைபெற கூடாது என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையிலும் உண்மைகளை மறைத்து சட்டத்திற்கு புறம்பாக பணிகள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து கோவை மாவட்ட வருவாய் அதிகாரிக்கு மனு அளிக்கப்படுள்ளதாகவும் தெரிவித்தனர். சாலை அமைக்கும் பணியானது உடனடியாக கைவிடப்படவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.