Others
நிதிஷ் அரசு–பிஹார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில்வெற்றி
நிதிஷ்குமார் அரசுக்கு 129 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேநேரம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடது முன்னணி ஆகிய எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மையை நிரூபித்தது நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு .மொத்தம் 243 உறுப்பினர்கள் கொண்ட பிஹார் சட்டப்பேரவையில் ஆளும் பாஜக – ஐக்கிய ஜனதா தள கூட்டணிக்கு 128 எம்எல்ஏக்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடது முன்னணி அடங்கிய மகாபந்தன் கூட்டணிக்கு 114 உறுப்பினர்கள் இருந்தனர். ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு ஒரு உறுப்பினர் உள்ளார். இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசுக்கு 129 எம்எல்ஏக்கள் ஆதரவாகவாக்களித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக, பிஹார் சட்டப்பேரவை சபாநாயகர் பதவியில் இருந்து ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த அவத் பிஹாரி சவுத்ரி நீக்கம் செய்யப்பட்டார். சபாநாயகருக்கு எதிராக பாஜக எம்எல்ஏ நந்த்கிஷோர் யாதவ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர 125 எம்எல்ஏக்கள் அதற்கு ஆதரவாகவும், 112 எம்எல்ஏக்கள் எதிர்த்தும் வாக்களித்தனர். தொடர்ந்து சபாநாயகர் பதவியில் அவத் பிஹாரி சவுத்ரி நீக்கம் செய்யப்பட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏக்கள் சேட்டன் ஆனந்த், நீலம் தேவி, பிரகலாத் யாதவ் ஆகியோர் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வரிசையில் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. “வாக்கெடுப்பு முடியும் வரை எம்எல்ஏக்கள் அவரவர் இருக்கைகளில் வந்து அமருங்கள். இல்லையென்றால் உங்கள் வாக்குகள் செல்லுபடியாகாது” என ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை விடுத்தார்.சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், “இதற்கு முன்பு லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவி ஆட்சியில் பிஹாரில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களின் ஆட்சியில் யாருக்காவது இரவு நேரத்தில் வெளியே செல்ல தைரியம் இருந்ததால் சொல்லுங்கள் பார்ப்போம். முதலில் சாலை இருந்ததா? சாலை உட்பட எந்த வசதிகளும் ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சியில் இல்லை. வளர்ச்சியை ஏற்படுத்துவதை விடுத்து அவர்கள் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள்.ஆர்ஜேடி தலைவர்கள் வாக்கு வங்கிக்காக முஸ்லிம்கள் குறித்து பேசுவார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்களின் ஆட்சிக் காலத்தில் அதிகபட்ச கலவரங்கள் நடந்தன. ஆர்ஜேடியுடன் கூட்டணி அமைத்தபோது நான் அவர்களுக்கு மரியாதை கொடுத்தேன். ஆனால் அவர்களின் முறைகேடுகள் பற்றி அறிந்தபோது நான் வேதனையடைந்தேன். ஆர்ஜேடி தலைவர்களின் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும்.இண்டியா கூட்டணி மூலம் நான் அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சித்தேன். ஆனால் என்ன நடந்தது… ஒன்றும் பலனளிக்கவில்லை. எனவே நான் எனது பழைய கூட்டணிக்கே திரும்பிவிட்டேன். இனி இவர்களை ஒருபோதும் விட்டு செல்லமாட்டேன்” என்று எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார்.