டீனை வீட்டுக்குள் வைத்து பூட்டிய மருத்துவர் கைது …
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜனை வீட்டுக்குள் வைத்து பூட்டிய மருத்துவர் செந்தில் கைது செய்யப்பட்டார். மனநலப் பிரச்சினை இருந்ததால், அவர் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை – சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) டீன் தேரணிராஜன் எழும்பூர் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த வாரம் இவர் வீட்டில் இருந்தபோது, வீட்டின் கேட்டை மர்ம நபர் ஒருவர் பூட்டி சென்றுள்ளார்.இது தொடர்பாக தேரணிராஜன் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் கீழ் செயல்படும் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் செந்தில்தான் வீட்டின் கேட்டை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.மருத்துவர் செந்திலை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவருக்கு மனநலப் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாற்றி வந்த செந்திலுக்கு மனநலப் பிரச்சினை இருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது நடவடிக்கை சரியில்லாததால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அந்த ஆத்திரத்தில் டீன் தேரணிராஜன் வீட்டின் கேட்டை மருத்துவர் செந்தில் பூட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது.