fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

என்னை பார்கக யாரும் வர வேண்டாம்…! விசிக தலைவர் திருமாவளவன் திடீர் அறிவிப்பு!

Thirumavalavan statement

சென்னை:

அக்கா பலியான சோகத்தால் தம்மை பார்க்க யாரும் வர வேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.

கொரோனாவால் பலியான தனது அக்காவின் இறுதி சடங்குகளில் அவர் கலந்துகொண்டார். இந்நிலையில் தன்னைப் பார்க்க தொண்டர்கள் யாரும் வரவேண்டாம் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே.. வணக்கம். என்னை ஆற்றுப்படுத்தும் நன்னோக்கில் என்னைத்தேடி அங்கனூருக்கு வருவது சரிதான். ஆனால், அது முற்றிலும் ஏற்புடையது அல்ல. பல மாவட்டங்களைக் கடந்து வந்து என்னைச் சந்திப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. எவ்வாறு நம்மைத் தீங்குசூழும் என்பதை நம்மால் ஊகிக்க இயலாது.

கொரோனா எவ்வளவு கொடியது என்பதை அக்காவைப் பலி கொடுத்ததிலிருந்து மேலும் கூடுதலாக உணர்ந்திருக்கிறேன். அவர் சென்னையில் வீட்டிலேயே தான் இருந்தார். எங்கும் வெளியில் செல்லவில்லை. அவரைத் தேடிவந்து ஓரிருவர் சந்தித்துள்ளனர். உரிய பாதுகாப்புடன்தான் அந்தச் சந்திப்புகள் நடந்துள்ளன.

ஓரிரு முறை வீட்டுக்கருகேயுள்ள பெட்டிக்கடைக்கு போனதாகச் சொன்னார். கைகளைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட எச்சரிக்கையாகச் செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்திருக்கிறார். ஆனாலும், அக்காவை எப்படியோ கொரோனா தொற்றிக் கொண்டதே!

அவரைக் காப்பாற்ற இயலாமல் பறிகொடுக்க நேர்ந்துவிட்டதே! ‘பெற்றவயிறு பற்றி எரியுதே’ என்று சொல்லிச் சொல்லி, அடிவயிற்றில் அடித்துக் கொண்டு அம்மா மூன்றுநாட்களாக இடையறாமல் கதறும்நிலை உருவாகிவிட்டதே! சிலநேரங்களில் அவர் பித்துப் பிடித்தைப்போல நிலைகுலைந்து தடுமாறும்நிலை ஏற்பட்டுள்ளதே!

கொரோனா எவ்வளவு கொடியது என்பதை இனியாவது நாம் உணரவேண்டாமா? யாரிடமிருந்து யாருக்கு இது தொற்றும் என்பதை எவராலும் கணித்திட இயலாதே! அறிகுறி காட்டாமலேயே பதுங்கியிருந்து தொற்றிக்கொள்ளும் கொடிய உயிர்க்கொல்லி அல்லவா இந்தக் கொரோனா? மனிதகுலத்தையே அழித்தொழிக்கும் இனக்கொலைக் கும்பல் அல்லவா இந்தக் கொரோனா கூட்டம்?

இனியும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா? கொரோனா கூட்டத்தின் உயிர்க்குடிக்கும் பயங்கரத்திலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டாமா? கொரோனா தொற்றிக்கொண்டால் அதனை அழித்தொழிக்கும் வலிமை எதற்குமே இல்லை; யாருக்குமே இல்லை. அது நம்மை உற்றார் உறவினரிடமிருந்து தனிமைப்படுத்திக் கொடுமைப்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமாய் நம் உயிரைக்குடிக்கும். இருமி-இருமி, மூச்சுத்திணறி- மூச்சுத்திணறி நாம் மெல்ல-மெல்ல சாவதை நாம் மட்டுமேதான் பார்க்கமுடியும். என்ன குரூரம் இது? நாம் சடலமான பிறகு செத்தநாயைத் தூக்கி எறிவதைப்போல அல்லவா புதைகுழியில் எறியப்படுவோம்.

தோழர்களே, தயவுகூர்ந்து இதை நெஞ்சிலே இருத்துங்கள். எனக்கு ஆறுதல் சொல்ல எத்தனிக்க வேண்டாம். உங்களால் எனக்கு ஏதும் ஏற்பட்டுவிடும் என்பதல்ல என் அச்சம். பயணத்தின் வழியில் கரோனா எங்காவது ஒளிந்திருந்து உங்கள்மீது பாய்ந்து குரல்வளையைக் கவ்விக் கொள்ளும். மென்னியை இறுக்கும். அதன் கோரப்பிடியிலிருந்து தப்பிப்பது யார்? என்று கூறி உள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close