fbpx
Others

கவரப்பேட்டை– பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினை அகற்றும் பணி தீவிரம்.

கவரப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு நின்றிருந்த சரக்கு ரயில்மீது வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் 13 ரயில்பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி பலத்த சேதமடைந்தன. நேற்று அப்பெட்டிகளை அகற்றும் பணிகள் நடந்தன. இதைத் தொடர்ந்து, இன்று காலை விபத்தில் சிக்கிய ரயில் இன்ஜினை அகற்றும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து கடந்த 10ம் தேதி காலை 22 பெட்டிகளில் சுமார் 1,600 பயணிகளுடன் பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கி பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. இந்த ரயில் நேற்று முன்தினம் இரவு கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டை பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்தது. அங்கு சிக்னல் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயிலின்மீது, பயணிகளுடன் வந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் வேகமாக மோதியது. இவ்விபத்தில், பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 பெட்டிகள் பலத்த சேதமடைந்து, தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. எனினும், இவ்விபத்தில் அனைத்து பயணிகளும் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.மேலும், 19 பயணிகள் காயமடைந்தனர். இந்நிலையில், கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே விபத்தில் சேதமடைந்த ரயில் பெட்டிகளை நேற்று மாலை 5.25 மணியளவில் முழுமையாக அகற்றினர். பின்னர், அங்கு தண்டவாளங்கள் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, இரவு 9 மணியளவில் அவ்வழியே ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி அனைத்து ரயில்களும் சுமார் 10 கிமீ வேகத்தில் கடந்து சென்றது.இதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் விபத்தில் சிக்கி பலத்த சேதமடைந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினை அகற்றும் பணிகளில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் இன்று மாலைக்குள் நிறைவு பெற்றதும், இவ்வழியே ரயில் போக்குவரத்து முழுமையாக சீரடைந்துவிடும் என்று ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இப்பணிகள் நடைபெறுவதால், 10 கிமீ வேகத்திலேயே கடந்து செல்கின்றன. இன்று காலை 11 மணி அளவில் மின்சார ரயில் சேவை தொடங்கியது.இதற்கிடையே, இன்று காலை கவரப்பேட்டையில் ரயில் இன்ஜினை அகற்றும் பணிகளின்போது, இடையிடையே மழை பெய்தது. இதனால் அப்பணிகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, மழை நின்றதும் ரயில் இன்ஜினை அகற்றும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும் ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close