fbpx
Others

மணிப்பூரில் அதிகரிக்கும் கலவரம்…

மணிப்பூர் மக்கள்

மணிப்பூரில் நாளுக்கு நாள் வன்முறை அதிகரித்து வரும் நிலையில், அங்கிருந்து ஏராளமானோர் அண்டை மாநிலங்களுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்து வருகின்றனர். ஆளும் பாஜக அரசு வன்முறையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.   இதனால் அங்கு இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் பல மாவட்டங்களுக்கு பரவி வன்முறை வெடித்தது. இந்த மோதல்களில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக மிசோரம், நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இடம்பெயர்ந்திருக்கின்றனர்.   வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மோதல் போக்கு தொடர்ந்து அதிரித்து வருகிறது. ஆளும் பாஜக அரசு வன்முறையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக பாஜக அமைச்சர் வீட்டை குறி வைத்து தாக்குதல்களும் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக தோங்ஜு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பாஜக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.   மணிப்பூரில் சுமார் 50,000 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் பாதுகாப்பு படையினருக்கும் வன்முறை கும்பல்களுக்கும் இடையே தொடர் மோதல் நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா மேற்கொண்ட அமைதி முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் மணிப்பூர் வன்முறை, ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களுக்கும் பரவக் கூடிய அச்சமும் அங்கு நிலவி வருகிறது.   இந்நிலையில், மணிப்பூரில் நடந்துவரும் வன்முறை தொடர்பாக அம்மாநிலத்தில் வசித்து வரும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி நிஷிகாந்த் சிங் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மணிப்பூர் தற்போது லிபியா, சிரியா, நைஜீரியா போன்று மாறிவிட்டது என்றும் இதனை யாராவது கேட்கிறீர்களா? என்றும் குறிப்பிட்டுள்ளார் . ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் இந்த ட்விட் தற்போது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close