fbpx
Others

நிதின் கட்கரி மோடியை தாக்கி பேசியது என்ன…..?

புதுடெல்லி: வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் உழைப்பால்தான் இன்று மோடி பிரதமராக முடிந்தது என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேசியது, பாஜவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜ நாடாளுமன்றக் குழுவில் இருந்து ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக மகாராஷ்டிரா துணை முதல்வரான தேவேந்திர பட்நவிஸ் நியமிக்கப்பட்டார். இந்த சூழலில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, ‘நாட்டில் பாஜ ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் வாஜ்பாயும், எல்.கே.அத்வானியும்தான். இவர்களின் அயராத பங்களிப்பால்தான், இன்று பாஜ ஆட்சி நடக்கிறது.
கடந்த 1980ம் ஆண்டுகளில் பாஜ வளர்ச்சி அடையவில்லை. முதன் முதலாக ஒரு கட்சி நிகழ்ச்சிக்காக பாந்த்ராவுக்குச் சென்றேன். அந்த நிழ்ச்சியில் வாஜ்பாய் உரையாற்றினார். அவரது உரை என்னை ஈர்த்தது. வாஜ்பாய், அத்வானி, தீன்தயாள் உபாத்யாய் ஆகியோரின் உழைப்பின் விளைவுதான் இன்று மோடி பிரதமராக முடிந்தது,’ என்று கூறினார். சில நாட்களுக்கு முன் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய கட்கரி, ‘சாலை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் போது, மாற்றுத் திட்டங்களும் நம்மிடம் இருக்க வேண்டும். இதன் மூலம், சாலையின் தரத்தில் எவ்வித சமரசம் செய்யாமல் செலவைக் குறைக்க முடியும். சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காதது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது’ என்று ஒன்றிய அரசை மறைமுகமாக விமர்சித்தார். அடுத்தடுத்து ஒன்றிய அரசையும், கட்சியின் வளர்ச்சியையும், மோடியையும் தாக்கி கட்கரி பேசி வருவது பாஜ.வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close