fbpx
Others

ஜிப்மரில் சரியான மருத்துவ சிகிச்சை இல்லை ரங்கசாமி வேதனை

 புதுச்சேரி ஜிப்மரில் மக்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று சட்டசபையில் ரங்கசாமி வேதனை தெரிவித்தார். புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. நாஜிம் கேட்ட கேள்விக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி அளித்த பதிலை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:- ரூ.6 கோடிக்கு பணி கேள்வி:- ஜிப்மர் நிறுவனத்தோடு சுகாதாரத்துறை போட்டுக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி புனரமைப்பு பணிக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.30 கோடி செலவிடப்பட்டதா? பதில்:- காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி புனரமைப்பு பணி கொரோனா பாதிப்பினால் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு மேற்கொண்டு எந்த பணியும் ஆரம்பிக்கப்படவில்லை. செலவு கணக்குகளை ஜிப்மர் நிர்வாகம் மேற்கொள்வதால் இதுவரை மேற்கொண்ட பணிக்கான செலவு மீதம் உள்ள தொகை பற்றிய விவரம் ஜிப்மர் நிர்வாகத்திடம் மட்டுமே உள்ளது. காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான முன்மொழிவு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். ஜிப்மர் சார்பில் ரூ.6 கோடி பணிகள் நடந்துள்ளது. ரூ.3 கோடிக்கு பொருட்கள் வாங்கியுள்ளனர். நான் டெல்லி சென்றிருந்தபோது மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்தேன். அப்போது கட்டிடம் கட்டுவதற்காக ரூ.20 கோடி தருவதாக கூறியுள்ளார். மேலும் நிதி ஒதுக்கி தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். ஜிப்மரில் சரியான சிகிச்சை இல்லை நாஜிம்:- அவர்கள் கூறியபடி அங்கு ரூ.6 கோடிக்கு வேலை நடக்கவில்லை. ஏற்கனவே 100 படுக்கையுடன் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு தொடங்குவதாகவும் அவர்கள் கூறினார்கள். ரங்கசாமி:- கடந்த ஆட்சியில் அதை விட்டுவிட்டார்கள். நாங்கள் இப்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஜிப்மருடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மாற்றியமைக்கவும் ஏற்பாடு செய்யப்படும். நாஜிம்:- காரைக்காலில் ஜிப்மர்- அரசு ஆஸ்பத்திரி அதிகாரிகளிடையே இடைவெளி உள்ளது. அதை சரிசெய்ய வேண்டும். நேரு (சுயே) :- ஜிப்மரில் புதுவை மக்களுக்கு சரியான சிகிச்சை கொடுப்பதில்லை. எந்த சிபாரிசினையும் அவர்கள் ஏற்பதில்லை. ரங்கசாமி: ஜிப்மரில் சரிவர சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பது உண்மை தான். இதற்கு அதிகாரிகளை அழைத்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தப்படும். ஜிப்மர் நிர்வாகத்திடம் குறைகளை சரிசெய்ய கூறியுள்ளோம். சபாநாயகர் செல்வம்:- இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி புதுவை வந்தபோது ஜிப்மர் அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளார். இவ்வாறு விவாதம் நடந்தது.
ஜிப்மரில் மக்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை

 

Related Articles

Back to top button
Close
Close