டங்ஸ்டன் கனிம சுரங்கம்—-ஒன்றிய அரசு இன்று ஆலோசனை…

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஒன்றிய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா அரிட்டாபட்டி உள்ளிட்ட 11 ஊர்கள் அடங்கிய பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையடுத்து உள்ளாட்சிகள் தினத்தன்று அரிட்டாபட்டியில் நடந்த ஊராட்சி கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பி.மூர்த்தி, டங்ஸ்டன் சுரங்க ஆய்விற்கு கூட தமிழ்நாடு அரசு ஒரு போதும் அனுமதி தராது என உறுதியளித்தார்.அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி, புலிப்பட்டி, எட்டிமங்கலம், வெள்ளரிப்பட்டி, கிடாரிப்பட்டி, ஆமூர் மற்றும் எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, கம்பூர், கேசம்பட்டி, கருங்காலக்குடி, அய்யாபட்டி, கச்சிராயன்பட்டி மற்றும் தும்பைப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனிடையே நேற்று முன்தினம் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டு அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றிய அரசுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஒன்றிய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. ஒன்றிய சுரங்கத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி, பிரதமருடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமர் உடனான ஆலோசனைக்கு பிறகு மாநில அரசுடன் பேசி ஓரிருநாளில்அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. 
டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கனிமொழி எம்.பி. வலியறுத்தியுள்ளார். டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி 2வது நாளாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.அவைநடவடிக்கைகளைஒத்திவைத்துவிட்டுவிவாதம்நடத்தவேண்டுமெனகனிமொழிஎம்.பிகோரிக்கைவிடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பாக மாணிக்கம் தாகூரும் நோட்டீஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் இது குறித்து மக்களவையில் பேசிய கனிமொழி எம்.பி.; டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி அளித்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும்.டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி தந்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு, கலாச்சார, பாரம்பரிய சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்கும் முன் மாநில அரசிடம் ஒன்றிய அரசு கலந்தாலோசிக்கவில்லை. டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பல்லுயிர் பெருக்கத்துக்கான முக்கிய இடம் என்பதால் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்க கூடாது. இந்த திட்டம் தடுத்த நிறுத்தப்பட வேண்டும் என தமிழக முதல்வரும் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆகவே டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.இது குறித்து பேசிய மாணிக்கம் தாக்கூர்; இறை நம்பிக்கை உள்ள இடங்களை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது. அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தாவுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வேதாந்தாவா? கடவுளா? என்றால் பா.ஜ.க. அரசு வேதாந்தாவுடன் செல்ல தயாராக உள்ளது என்றும் தாக்கூர் விமர்சனம் செய்தார்.இதனை தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு; தமிழ்நாடு சட்டப்பேரவையின் தீர்மானத்தை ஏற்று டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும். தமிழ்நாட்டில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளித்தால் பெரும் சுற்றுச்சூழல் கேடு ஏற்படும் என்று கூறினார்.