fbpx
Others

எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு நிறைவேற்றிய 3 குற்றவியல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியில் பெயர் சூட்டப்பட்ட 3 மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து அமலுக்கு வந்தது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 146 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு இடையே 3 புதிய குற்றவியல் மசோதாக்கள்நிறைவேற்றபட்டுள்ளது.ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து அமலில் இருக்கும் 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டுவர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 திருத்தப்பட்ட சட்ட மசோதாக்களை கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசு தாக்கல் செய்தது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. இக்குழு சில ஆலோசனைகளுடன் தனது பரிந்துரையை கடந்த மாதம் சமர்ப்பித்தது.இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் திருத்தப்பட்ட மசோதாக்களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். இதுவரை இருந்த குற்றவியல் சட்ட மசோதாக்கள், ஆங்கிலேய மனப்பான்மையை பிரதிபலிப்பவையாக இருந்ததாகவும், இந்திய மனப்பான்மையை பிரதிபலிக்கும் விதமாக இந்த 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களும் இருக்கும்என்றும்நாடாளுமன்றத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்து இருந்தார். நாடாளுமன்றத்தில் பெருமளவிலான எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆளும் கட்சி எம்.பிக்களே அவையில் அதிக அளவில் இருந்தனர்.தொடர்ந்து இந்த 3 மசோதாக்களும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து இந்த மசோதாக்கள் ஜனாதிபதி ஓப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இந்த 3 மசோதாக்களும் அடுத்த 3 மாதங்களுக்குள் சட்டமாகிறது.

Related Articles

Back to top button
Close
Close