fbpx
Others

“இரட்டை கோபுரங்கள் ” இன்று தரைமட்டம்  நொய்டா– டெல்லி

நொய்டாவில் இன்று தரைமட்டமானது ‘இரட்டை கோபுரங்கள்  ‘எமரால்டு குடியிருப்பு சங்க’ இரட்டை கோபுர கட்டிடங்கள். இவற்றில் ‘ஏப்பெக்ஸ்’ என்ற கட்டிடத்தில் மொத்தம் 32 தளங்கள். ‘சியான்’ என்ற மற்றொரு கோபுரத்தில் 29 தளங்கள். இந்த 100 மீட்டர் உயர கட்டிடங்கள், டெல்லியின் புகழ்பெற்ற குதுப்மினார் கோபுரத்தையும் தாண்டியவை. ‘இரட்டை கோபுரம்’ என்றாலே நமக்கு கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் அல்-கொய்தாவின் தாக்குதலில் தகர்ந்த உலக வர்த்தக மைய கட்டிடங்கள்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், தலைநகர் டெல்லி அருகேயும் இந்தியாவின் பெயர் ‘போன’ இரட்டை கோபுரங்கள்இருக்கின்றன. நொய்டாவில் இன்று தரைமட்டமாகும் இரட்டை கோபுரங்கள்   அவை ‘இருந்தன’என்ற நிலையை இன்றே அடையப்போகின்றன. ஆம், அமெரிக்க இரட்டை கோபுரங்கள் பயங்கரவாதத்தால் தகர்ந்தன என்றால், இந்திய இரட்டை கோபுரங்கள் நீதித்துறை உத்தரவால் உடைந்து நொறுங்கப் போகின்றன. டெல்லி அருகே உத்தரபிரதேச மாநிலத்தின் கவுதம புத்தாநகர் மாவட்டத்தில் திட்டமிட்டு வளர்ந்த நகரம் நொய்டா. இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக்கு அடையாளச் சீட்டு இந்த நவீன நகர்ப்புறம். இங்கு, வெளிநாடுகளுக்கே சவால்விடும் நெடிதுயர்ந்த பலமாடி கட்டிடங்கள் ஏராளம். அப்படி உருவானவைதான், ‘சூப்பர்டெக்’ நிறுவனத்தின் ‘எமரால்டு குடியிருப்பு சங்க’ இரட்டை கோபுர கட்டிடங்கள். இவற்றில் ‘ஏப்பெக்ஸ்’ என்ற கட்டிடத்தில் மொத்தம் 32 தளங்கள். ‘சியான்’ என்ற மற்றொரு கோபுரத்தில் 29 தளங்கள். இந்த 100 மீட்டர் உயர கட்டிடங்கள், டெல்லியின் புகழ்பெற்ற குதுப்மினார் கோபுரத்தையும் தாண்டியவை உண்மையில் இங்கு கட்ட திட்டமிடப்பட்டவை 14 மற்றும் 9 தளங்கள்தான். கடந்த 2004-ல் உருவான அந்த திட்டம், பின்னர் 2012-ல் திருத்தப்பட்டது. அதன்படி, இரு கோபுரங்களிலும் 40 தளங்கள் வரை கட்ட நொய்டா ஆணையம் அனுமதி அளித்தது. அது விதிமீறல் என்று எதிர்ப்பு தெரிவித்து எமரால்டு குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், இரட்டை மாடி கட்டிடங்களை 4 மாதங்களுக்குள் இடிக்கவும், வீடு வாங்கியவர்களுக்கு (ஒரு வீட்டின் விலை ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை) அவர்கள் செலுத்திய தொகையை 12 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதை எதிர்த்த மேல்முறையீட்டில், கட்டுமான விதிகளை மீறி இக்கட்டிடங்கள் கட்டுப்பட்டுள்ளன என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பை கடந்த ஆண்டு ஆகஸ்டில் உறுதி செய்தது. அதையடுத்து, இரட்டை கோபுரங்களை இடிப்பதற்கான திட்டமிடல், பணிகள் தொடங்கின.மும்பையைச் சேர்ந்த ‘எடிபைஸ் என்ஜீனியரிங்’ என்ற நிறுவனம் மற்றும் அதன் தென்ஆப்பிரிக்க பங்குதாரரான ‘ஜெட் டெமாலிஷன்ஸ்’ நிறுவனத்திடம் இடிப்பு பணி ஒப்படைக்கப்பட்டது. இரண்டு கோபுரங்களிலும் ஆங்காங்கே துளையிட்டு வெடிபொருட்களை நிரப்பும் பணி கடந்த திங்கட்கிழமை முடிவடைந்தது. அதில், கட்டிடங்களை வெடிவைத்து தகர்ப்பவர்கள், பயிற்சி பெற்ற ஊழியர்கள் என 40 பேர் பங்கேற்றனர். மொத்தம் 20 ஆயிரம் இடங்களில் வெடிமருந்து வைக்கப்பட்டு, அவற்றுக்கு இடையில் இணைப்பு கொடுக்கப்பட்டது. அவை அனைத்தையும் சேர்த்து பிரதான இணைப்பு இன்றுதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. வெடிமருந்து வைக்கப்பட்ட பகுதிளைச் சுற்றி கம்பிவலையும், ‘ஜியோ டெக்ஸ்டைல் கிளாத்’ என்ற துணியும் போட்டு நன்கு சுற்றப்பட்டிருக்கின்றன. இந்த கம்பி வலையின் மொத்த எடை 225 டன்கள். துணியின் நீளம் 110 கி.மீ. தகர்ப்பின்போது இடிபாடுகள் பறந்து அண்டையில் உள்ள கட்டிடங்களை தாக்காமல் இவை போட்டு சுற்றப்பட்டிருக்கிறது இரு கட்டிடங்களிலும் மொத்தம் 3 ஆயிரத்து 700 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது பசை அல்லது பவுடர் வடிவில் உள்ளது. அரியானாவின் பல்வாலில் இருந்து இது கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த வெடிமருந்து மிகவும் வலுவானது அல்ல. ஆனால் பெருமளவில் பயன்படுத்தும்போது கான்கிரீட்டையே தகர்த்துவிடும். பல்வேறு அரசு அமைப்புகளிடம் முறையான அனுமதி வாங்கிய பிறகே இந்த வெடிபொருளை பெற முடியும் என்று இப்பணியில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ‘அருவி உள்வெடிப்பு’ முறையில் தொடர்ச்சியாக 10 வினாடிகளுக்கு வெடிபொருட்கள் வெடிக்க, 9 வினாடிகளுக்குள் ஒட்டுமொத்த கட்டிடமும் சீட்டுக்கட்டு போல சரிந்துவிடும். அதனால் எழும் தூசி மண்டலம் அடங்குவதற்குத்தான் 10 நிமிடங்கள் ஆகும் என எடிபைஸ் நிறுவனத்தின் திட்ட மேலாளர் மயூர் மேத்தா கூறுகிறார். கட்டுவது மட்டுமல்ல, அக்கம்பக்கத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் இடிப்பதற்கும் ஏக திட்டமிடல், உழைப்பு வேண்டியிருக்கிறது. மொத்தமாக சுமார் 100 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர் ஆனால் இடிப்பதுடன் வேலை முடிந்துவிடாது. இதனால் குவியும் 55 ஆயிரம் டன் கட்டிட கழிவுகளை அகற்றுவது அடுத்த தலைவலி. அந்த சுமார் 3 ஆயிரம் லாரி ‘லோடு’ கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு 3 மாதங்களுக்கு மேல் ஆகுமாம். ஒரு ஆறுதலான விஷயம், கழிவுகளில் கிடைக்கப்போகும் 4 ஆயிரம் டன் இரும்பு மற்றும் உருக்கு. இது இடிப்பு செலவில் ஒரு பகுதியை ஈடுகட்டும் என்கிறார்கள். மொத்தம் 7.5 லட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவு கொண்ட இவ்விரு கட்டிடங்களை இடிக்க ஆகும் செலவு ரூ.20 கோடி. அதில் 5 கோடியை சூப்பர்டெக் வழங்குகிறது. இரு கோபுரங்களிலும் 915 குடியிருப்புகள் உள்ள நிலையில் அவற்றில் 633 ‘புக்’ செய்யப்பட்டுவிட்டன. முறைப்படி கட்டுமானம் அமைந்து, அனைத்து குடியிருப்புகளையும் விற்றிருந்தால் சூப்பர்டெக் நிறுவனத்துக்கு கிடைத்திருக்கக்கூடிய தொகை ரூ.1,200 கோடி. ஆனால் விதிகளை காற்றில் பறக்கவிட்டதால், குடியிருப்பு வாங்கியவர்களுக்கு வட்டியுடன் தொகையை திரும்ப வழங்குவதுடன், கட்டிட கழிவுகளை கிளறிக்கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு இந்நிறுவனம் தள்ளப்பட்டிருக்கிறது. இரட்டை கோபுர தகர்ப்பையொட்டி இன்று நொய்டாவில் குறிப்பிட்ட பகுதியில் ‘டிரோன்கள்’ பறக்க தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. தகர்ப்பு வேளையில் 1 நாட்டிகல் மைல் தூரத்துக்கு வான்வெளியில் விமானம் பறப்பதற்கும் தடை. சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படும். ஆம்புலன்சுகளுடன் அவசரகால ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். வெடிபொருட்கள் சரியாக செலுத்தப்பட்டிருக்கின்றனவா என்று பரிசோதிப்பது போன்ற இறுதிக்கட்ட பணிகள் நேற்று நடைபெற்றன. அக்கம்பக்கத்தில் இருந்து சுமார் 5 ஆயிரம் பேரும், நூற்றுக்கணக்கான செல்லப்பிராணிகளும், 3 ஆயிரம் வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டிருக்கின் றன. தமது ‘நெற்றி’யில் எடிபைஸ் நிறுவனத்தின் பதாகையை சுமந்தபடி, மாலையிட்ட பலியாடு போல பரிதாபமாக நிற்கின்றன இந்த இரட்டை கட்டிடங்கள். பல மாத காலம், பல நூறு பேரின் உழைப்பில் உருவான இந்த இரு உயர கட்டிடங்கள், இன்று பிற்பகல் சரியாக 2.30 மணிக்கு தகர்ப்பு நிபுணர் சேத்தன் தத்தா ஒரு பொத்தானை அழுத்தியதும் பொலபொலவென்று உதிர்ந்தன .. தற்காலிக லாபத்துக்காக விதிமுறைகளை வீசியெறிவோருக்கு இது ஓர் எச்சரிக்கை மணி. அனுபவபட்டவர்களின் எச்சரிக்கை நொய்டா இரட்டை கோபுர கட்டிடங்கள் இன்று இடிக்கப்படும் நிலையில் அங்கு அருகே வசிக்கும் மக்களுக்கு, ஏற்கனவே விதிமீறல் கட்டிடங்கள் இடிக்கப்பட்ட கேரளாவின் மராடுவாசிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது, ‘கட்டிட தகர்ப்பின்போது உங்கள் வீடும் சேதம் அடையக்கூடும். அதற்கு உரிய இழப்பீடு கிடைப்பதை அதிகாரிகளிடம் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், காப்பீடு செய்திருந்தாலும் உரிய இழப்பீடு கிடைக்காது. உங்களால் கோர்ட்டுக்கும், வீட்டுக்கும் அலைந்துகொண்டிருக்க முடியாது. பல லட்ச ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டவர்கள் என்ற முறையில் இதைச் சொல்கிறோம். பெரும் தூசிப்படலத்தாலும் உங்களுக்கு துயரம் ஏற்படலாம்’ என்கிறார்கள்…

Related Articles

Back to top button
Close
Close