fbpx
Others

ஆளுநர் ஆர்.என். ரவி–நான் மகாத்மா காந்தியை அவமதிக்கவில்லை.

 ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேசத்தந்தை மகாத்மா காந்தியை நான் அவமரியாதையுடன் பேசியதாக கடந்த 3-4 நாட்களாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. நான் கூறியதில் உண்மையைத் தவிர வேறில்லை. மகாத்மா காந்தி மீது நான் மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன். அவரது போதனைகளை எனது வாழ்வின் லட்சியங்களாகக் கொண்டிருக்கிறேன்.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த தினத்தை முன்னிட்டு கடந்த 23ம் தேதி நான் பேசிய பேச்சின் சில பகுதிகளை மட்டும் எடுத்து சில ஊடகங்கள் சர்ச்சைக்குரியதாக மாற்றி இருக்கின்றன. நாட்டின் சுதந்திரத்துக்காக நேதாஜி அளித்த பங்களிப்புக்காக அவர் போதுமான அளவு பாராட்டு பெறவில்லை என்பதை நான் மிகவும் விளக்கமாக பேசினேன். நேதாஜியின் உந்துதலின் பின்னணியில் 1946 பிப்ரவரியில் ராயல் இந்திய கப்பற்படையிலும், விமானப் படையிலும் ஏற்பட்ட கிளர்ச்சிகள் எவ்வாறு 1947ல் இந்திய சுதந்திரத்துக்கு தூண்டுகோலாக விளங்கின என்பதை விவரிக்க முயன்றேன்.இந்த கிளர்ச்சிக்குப் பிறகுதான், சீருடையில் இருக்கும் இந்தியர்கள் தங்களுக்குப் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என்ற பதற்றம் பிரட்டனுக்கு ஏற்பட்டது. இந்த கிளர்ச்சி 1946, பிப்ரவரியில் நடைபெற்றது. 1946, மார்ச்சில் தாங்கள் இந்தியாவை விட்டு வெளியேற உள்ளதாக வெளிப்படையாக அவர்கள் அறிவிக்கிறார்கள். அதன் தொர்ச்சியாகவே அரசியல் சாசன அவை உருவாக்கப்பட்டது. இந்தியாவில் இருக்கும் பிரிட்டன் அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பு கருதி போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியர்களை அவர்கள் சமாதானப்படுத்தினார்கள். பிரிட்டனுக்கு எதிராக இந்திய தேசிய ராணுவம் நிகழ்த்திய போர் மற்றும் கப்பற்படை மற்றும் விமானப்படையின் கிளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர் நேதாஜி.1942, ஆகஸ்ட்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டம் தொடக்ககால வெற்றிக்குப் பிறகு அதன் தீவிரத்தை இழந்தது. முஸ்லிம் லீக்கின் பிடிவாதமான இந்திய பிரிவினை காரணமாக தேசிய சுதந்திர இயக்கத்தில் உள்மோதல்கள் ஏற்பட்டு, அதனை எவ்வாறு கையாள்வது என்பதிலேயே காங்கிரசின் சக்தி செலவிடப்பட்டது. இந்த சூழலில், பிட்டீஷ் இன்னும்கூட சில ஆண்டுகள் இந்தியாவை ஆண்டிருக்க முடியும். ஆனால், நேதாஜியின் ராணுவப் புரட்சி மற்றும் அது ஏற்படுத்திய ராணுவ கிளர்ச்சி காரணமாக அது தடுக்கப்பட்டது. இவை அனைத்தும் ஆவணங்களில் இருக்கும் உண்மைத் தகவல்கள். நான் மகாத்மா காந்தியை அவமதிக்கவில்லை. அவரது போதனைகள் எனது வாழ்க்கைக்கு ஒளிவிளக்காக விளங்கி வருபவை” என தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close