கேள்விக்குறியாகும் பாஜ ஆட்சி 5 ஆண்டு ஆட்சி….?
பாஜ ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்குமா என்பது கேள்விக்குறிதான் என்று திருமாவளவன் எம்பி கூறினார். மாமல்லபுரம் இசிஆர் சாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ரிசார்ட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மக்களின் பேராதரவோடு வெற்றி பெறும். அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கி இருப்பது என்ன ராஜதந்திரம் என்று விளங்கவில்லை. அதிமுகவிற்கு இது பின்விளைவை ஏற்படுத்தும். சாதி, மதவாத சக்திகளுக்கு ஆதரவாக அதிமுக இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிற விமர்சனம் இப்போது வலுவாக எழுந்துள்ளது. அதிமுகவின், இந்த நிலைப்பாடு ஜனநாயக சக்திகளுக்கு இடையே ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த காலங்களில் எடுத்தேன், கவிழ்த்தேன் போல சட்டங்களை மக்களுக்கு விரோதமாக ஏற்றியது போல இந்த முறை அவ்வாறு செயல்பட முடியாது. அதற்கு, திமுக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி இடம் கொடுக்க வாய்ப்பு இல்லை. அவர்கள், கூட்டணி கட்சிகளின் தயவோடு ஆட்சியையும், அரசையும் அமைத்து இருக்கிறார்கள். நிலையான அரசை தரவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்றாலும், 5 ஆண்டுகளுக்கு நீடிக்குமா என்பது கேள்விக்குறிதான். இவ்வாறு அவர் கூறினார்..