வானதி சீனிவாசன்—என்ன நடக்கிறது கோவை மாநகரில்….?
கோவை இருகூர் ஏஜி புதூர் அருகே நேற்று மாலை ஒரு பெண் காரில் கடத்தி செல்லப்பட்டதாக தகவல் வெளியானது. பெண் அலறல் சத்தத்துடன் காரில் செல்லும் பதைபதைக்கும் சிசிவிடி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது குடும்பப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா அல்லது கடத்தப்பட்டாரா என்பதை கண்டறிய காவல்துறை 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.இந்த சம்பவம் கோவையில் பெரும் பதற்றத்தையும், பதைபதைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை விமான நிலையம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்த பிரச்சனை ஓய்வதற்குள் இந்தசம்பவம்நடந்திருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பெண்களுக்கு எதிராக நடைபெறும் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்ன நடக்கிறது கோவை மாநகரில் கோவை இருகூரில் பரபரப்பான சாலை ஒன்றில் பெண் ஒருவர் கடத்தப்படும் அதிர்ச்சி காணொளி மனதை பதைபதைக்க செய்கிறது. ஐந்து நாட்களுக்கு முன் விமான நிலையம் அருகில் ஒரு கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.அந்த கொடூரத்தின் ரணம் ஆறும் முன்னரே மீண்டுமொரு பெண் கடும் அலறல் சத்தத்துடன் கடத்தப்படுகிறார். ஒரு அரசியல் தலைவர் என்பதைத் தாண்டி, கோவையிலேயே பிறந்து வளர்ந்து, வாழ்ந்து வரும் ஒரு மண்ணின் மகளாக மனதில் பல சந்தேகங்களும் கேள்விகளும் தோன்றுகின்றன. கல்வியிலும் தொழிலிலும் சிறந்து விளங்க வேண்டிய கோவை இப்படி பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கூடாரமாக மாறியது எப்படி ?. பேச்சிலேயே பாசத்தையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் மண் இன்று பெண்களின் மரியாதையையும் பாதுகாப்பையும் பறிக்கும் மண்ணாய் மாறியது எப்படி. ஒருவேளை பெருகிவரும் போதைப்பொருளா? அல்லது திக்கெட்டும் இருக்கும் டாஸ்மாக்கா? அல்லது பயமின்றி உலவும் குற்றவாளிகளா? அல்லது ஏவல்துறையாக மாறிய காவல்துறையா? அல்லது இதையெல்லாம் முறையாக நிர்வகிக்க தவறிய முதல்வர் மு.க. ஸ்டாலினா. காரணம் எதுவாயினும், சட்டம் ஒழுங்கை சீரழித்து வேடிக்கை பார்த்து என் தாய்மண்ணில் தமிழக மகளிருக்கு பாதுகாப்பு இல்லாமல் தவிக்கவிட்ட பாவம் திமுக அரசை சும்மா விடாது. நிச்சயமாக, கூடிய விரைவில், இதற்கெல்லாம் மக்கள் மன்றத்தில் திமுக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.” என்று கூறியுள்ளார்.