தேனி மாவட்டம், பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கோவிந்தன் மயில் தாயம்மாள் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணித்திட்டத்தின் மூலம் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே .எஸ். சரவணக்குமார் மற்றும் பெரியகுளம் நகர் மன்ற தலைவர் சுமிதா சிவகுமார், தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு 250க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு மற்றும் சீர்வரிசை பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்வில், பெரியகுளம் வட்டார ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி , வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பவானந்தன், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மாநில செயற்குழு உறுப்பினர் சித்ரா தேவி, திமுக பெரியகுளம் நகர செயலாளர் முகமது இலியாஸ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை பணியாளர்கள், பெரியகுளம் நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், கர்ப்பிணி பெண்களின் குடும்பத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.