பிரதமர் மோடி–இந்தியாவை உலகமே ஆதரித்த போது காங்கிரஸ் மட்டும்ஆதரிக்கவில்லை…
உலகமே இந்தியாவை ஆதரித்த போது,நமதுராணுவத்தைகாங்கிரஸ்மட்டும்ஆதரிக்கவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பின் காங்கிரஸ் தன்னை 56 இன்ச் மார்பு எங்கே என்று எள்ளி நகையாடியதாக கூறிய மோடி, காங்கிரஸ் கட்சியின் அந்த நடவடிக்கை ராணுவத்தின் மன உறுதியை குலைப்பதாக அமைந்துவிட்டதாக விமர்சித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்த விவாதம் நடந்து வருகிறது. மதியம் மத்திய உள்துறை
அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பினார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்து வருகிறார்.அதில் மோடி பேசுகையில், உலகமே இந்தியாவை ஆதரித்த போது நமது ராணுவத்தை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு பின் காங்கிரஸ் கட்சியினர் 56 இன்ச் மார்பு எங்கே என்று என்னை எள்ளி நகையாடினர். எதிர்க்கட்சியினர் சேற்றை வாரி இறைத்தது ராணுவத்தின் மன உறுதியை குலைப்பதாக அமைந்துவிட்டது. காங்கிரஸ் தலைவர்கள் பேசியது செய்தியாகலாம். ஆனால் அது மக்கள் மனதில் இடம் பெறாது. இந்திய ராணுவம் கூறுவதை நம்ப மறுப்பவர்கள், பாகிஸ்தான் ராணுவம் கூறுவதை நம்புகிறார்கள். தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியதால் மட்டுமே சண்டையை நிறுத்த முடிவு செய்தோம். போரை நிறுத்தும்படி எந்த நாட்டு தலைவர்களும் இந்தியாவிடம் கூறவில்லை.அமெரிக்கா துணை அதிபர் என்னிடம் பேசிய போது, இந்தியாவின் தாக்குதல் கடுமையாக இருக்கும். பாகிஸ்தானின் ஒவ்வொரு துப்பாக்கி குண்டுகளுக்கும், பீரங்கி மூலமாக பதிலடி இருக்கும் என்றேன். ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை.. அது தொடர்கிறது. அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானை நம்பி இருக்கிறது. மக்கள் மனங்களில்
சந்தேக விதைகளை விதைக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. வாய்ச்சொல் வீரர்கள் என்று எதிர்க்கட்சியை கண்டு நாடே சிரிக்கிறது. அபிநந்தன் திரும்பி வந்த போது கிசுகிசுத்தவர்கள், தங்களின் வாயை மூடி கொண்டார்கள். ராணுவத்திற்கு எதிரான நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி எப்போதும் எடுக்கிறது என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த பேச்சிற்கு நாடாளுமன்றத்திலேயே காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெயரைக் குறிப்பிடாமல் காங்கிரஸ் கட்சியின் கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.