சென்னை ஐகோர்ட்– விஜய்க்கு இரண்டு வாரம் கெடு….
தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பின் நிறுவன தலைவர் பச்சையப்பன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சிகப்பு மஞ்சள் சிவப்பு நிறத்தில், தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை கொடி உருவாக்க திட்டமிடப்பட்டு, தமிழக அரசு பதிவுத்துறையில் சபையின், வர்த்தக முத்திரையாக கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவு செய்யப்பட்டு, சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை மட்டுமே இந்த வர்த்தக முத்திரையை பயன்படுத்த உரிமை உள்ளது. வேறு எந்த நபர்களும் கொடியில் அனுமதியின்றி பயன்படுத்த முடியாது எனக் கூறப்பட்டுள்ளது. அதனால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், எங்களது கொடியை தவறாக பயன்படுத்தியதற்காக ரூ.5 லட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்” என தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை நிறுவனர் மற்றும் தலைவர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தவெக தலைவர் விஜய், கட்சி பணிகளை கடந்து பல
சேவைகள் செய்து வருகிறார். அதனால், கொடியை தொடர்ந்து பயன்படுத்த அனுமதித்தால் வீணான குழப்பம் ஏற்படும்” என்றும் தெரிவித்தார். அப்போது, வர்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்கு தானே பொருந்தும், எப்படி அரசியல் கட்சியின் கொடிக்கு பொருந்தும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.அதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், வர்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்கு மட்டுமல்லாமல் சேவைக்கும் பொருந்தும் என்றும், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கும் வர்த்தக முத்திரை பொருந்தும் என்று விளக்கம் அளித்தார். இதையடுத்து, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்றும், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அந்த கட்சியின் தலைவர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.