உள்ளாட்சி தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக வெற்றி ….
மகாராஷ்டிராவின் 286 நகராட்சி கவுன்சில், 42 நகர பஞ்சாயத்துக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தற்போது முடிவுகள் முழுமையாக வெளியாகியுள்ளன.பாஜக தலைமையில் மகாயுதி கூட்டணியும், அதேபோல காங்கிரஸ் தலைமையில் மகா விகாஸ் அகாடி கூட்டணி என, இரண்டு கூட்டணிகள் களம் கண்டன. பாஜக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அஜித் பவார் தலைமையிலான என்சிபி மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சரத்பவார் தலைமையிலான என்சிபி என கட்சிகள் களம் கண்டிருந்தன. இந்த கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் கூட்டணியாக களம் கண்டிருந்தாலும், சில குறிப்பிட்ட இடங்களில் தனித்தனியாகவே களம் கண்டன. இதில் 207 இடங்களை மகாயுதி கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 53 தொகுதிகளிலும், அஜித் பவார் தலைமையிலான என்சிபி 37 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி கூட்டணி வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் 28, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 9, சரத் பவார் தலைமையிலான என்சிபி 7 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.பத்தாண்டிற்குப் பிறகு நடைபெற்ற இத்தேர்தல்களில், விவசாய நெருக்கடிகள் போன்ற பொருளாதாரச் சவால்கள் இருந்தபோதிலும், எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. பாஜகவின் வெற்றிக்கு தேர்தல் ஆணையம் உதவியதாக, காங்கிரசும் உத்தவ் சிவசேனாவும் குற்றம் சாட்டியுள்ளன.காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்தால், பாஜக கூட்டாளிகளான ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவாருக்கு எச்சரிக்கை விடுத்தார். “பாஜகவின் வெற்றி ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. இரண்டு கட்சிகளையும் நிச்சயம் பாஜக காலி செய்துவிடும். தேர்தல் ஆணையத்திற்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார். மகாயுதி கூட்டணிக்குள், பாஜக தனித்து நின்றிருக்கிறது. இக்கட்சி 117 நகராட்சித் தலைவர் பதவிகளையும், 3,300-க்கும் அதிகமான கவுன்சிலர் இடங்களையும் வென்றது. இது மொத்த கவுன்சிலர்களில் கிட்டத்தட்ட 48% ஆகும். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இந்த வெற்றியை சாதனை எனக் குறிப்பிட்டுள்ளார். 2017-ஆம் ஆண்டை விட கவுன்சிலர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார்.மகாயுதி மேற்கு மகாராஷ்டிரா, மராத்வாடா, கொங்கண் மற்றும் வடக்கு மகாராஷ்டிராவில் வலுவான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. எனினும், விதர்பாவில் 100 இடங்களில் 73-ஐ கூட்டணி பெற்றபோதிலும், சந்திரபூர் மாவட்டத்தில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்தது. அஜித்பவார் தலைமையிலான என்சிபி புனே மற்றும் பாராமதியில் தனிப்பட்ட பலத்தைக் காட்டி, பெரும்பான்மையான தலைவர் பதவிகளை அங்கே வென்றது.அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, புனே மாவட்டம் மற்றும் பாராமதியில் குறிப்பிடத்தக்க பலத்தை வெளிப்படுத்தியுள்ளது. அங்கு போட்டியிட்ட பெரும்பாலான நகராட்சித் தலைவர் பதவிகளை அக்கட்சி வென்றது. இந்தச் செயல்பாடு, மாநில அளவில் கூட்டணிகள் மாறினாலும், சிறிய நகர்ப்புற மையங்களில் பவாரின் பிடியையும், அவரது செல்வாக்கையும் உறுதிப்படுத்துகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.