ஆவடி காவல் ஆணையர் கே.சங்கர் ஆய்வு …!

செங்குன்றம் காவல் நிலைய வளாகத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை ஆவடி காவல் ஆணையர் கே.சங்கர் ஆய்வு செய்தார்.ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் காவல் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் பொன்னேரியில் செயல்பட்டு வருகிறது. இதனால் செங்குன்றம், வடகரை, வடபெரும்பாக்கம், அழிஞ்சிவாக்கம், சென்றம்பாக்கம், விளாங்காடுபாக்கம், தீர்த்தக்கரையம்பட்டு, புள்ளிலைன், பம்மது குளம், பாடியநல்லூர், அலமாதி, நல்லூர், கும்மனூர், சோழவரம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் புகார்கள் அளிக்க பொன்னேரி செல்வதற்கு மிகுந்த சிரமமாக உள்ளதாக ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கருக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தன. அதன்படி செங்குன்றம் காவல் நிலைய வளாகத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஆவடி மாநகர காவல் ஆணையர் கே.சங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம், ஜிஎன்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதனால் போக்குவரத்து நெரிசலை எப்படி தடுப்பது என்பது குறித்தும் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். உடன் செங்குன்றம் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன், போக்குவரத்து ஆய்வாளர் சோபிதாஸ், மற்றும் உதவி ஆய்வாளர்கள், உடனிருந்தனர்.