fbpx
Others

ஆடிட்டர் குருமூர்த்தி– புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் ரகசியம்…

மோடிக்கு மெயில் அனுப்பியது யார்? குருமூர்த்தி சொன்ன 'செங்கோல்' ரகசியம்?

பாஜக ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு என புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அப்போது பிரமர் மோடி தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஆதீனங்கள் கைகளிலிருந்து செங்கோலை வாங்கி அதை அவையில் நடுவே நிறுவினார்.

இந்தச் செங்கோல் நாடு சுதந்திரம் அடைந்தபோது, திருவாவடுதுறை ஆதீனகர்த்தாவால் நேருவிடம் வழங்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அந்தச் செங்கோல் என்ன ஆனது என்பது பலரும் அறியாத தகவலாக இருந்தது. அதை மீண்டும் கண்டுபிடித்து புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வைப்பதற்காக முயற்சியை பாஜக அரசு செய்தது.அதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தன. இப்போது அந்தச் செங்கோல் பற்றிய விசயம் எப்படி பிரதமருக்குச் சென்றது? அவர் எப்படி அதை நாடாளுமன்ற கட்டடத்தில் கொண்டு வைக்கத் திட்டம் வகுத்தார்? இப்படியான தகவல்களை ஆடிட்டர் குருமூர்த்தி வெளிப்படையாகப் போட்டு உடைத்துள்ளார்.அதன் பின்னால் இருந்த மாஸ்டர் மைண்ட் யார் என்பதையும் அவர் விளக்கியுள்ளார். இது பற்றி குருமூர்த்தி பேசுகையில், “எனது அனுபவங்கள் பற்றி ஒரு தொடர் எழுத வேண்டும் என்று பலரும் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அப்படி எழுதும் போது என்னைப் பற்றி அதிகமாக எழுத வேண்டுமே என்று எனக்கு ஒரு தயக்கம் இருந்தது.எனது அனுபவத்தை எழுத வேண்டும் என்றால், என்னைத் 

தள்ளி வைத்துவிட்டு எழுத முடியாது. ஆகவே, 3 ஆண்டுகள் இதைப் பற்றி யோசித்துக் கொண்டே இருந்தேன்.எனது வாழ்க்கை என்பதே காஞ்சி சங்கராச்சாரியார் இல்லாமல் இல்லை. அவர் மூலமாகத்தான் பலர் எனக்குக் கிடைத்தார்கள். ஆகவே எனது தொடருக்கு ‘அவர் தந்த அனுபவங்கள்’ என்று தலைப்பு வைத்தேன்.காஞ்சி சாமியார் ஒருவருக்குச் செங்கோல் பற்றி விளக்கி இருந்ததைப் படித்தேன். அவர் ஒரு டாக்டர். அவருடன் பேசும் போது என்றைக்கு நமக்குச் சுதந்திர தினம் என்று கேட்கிறார். அதற்கு அவர், ‘இன்றைக்குத்தான்’ என்று பதில்சொல்கிறார். அதாவது 1978 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று இந்த உரையாடல் நடக்கிறது. அந்தப் புத்தகத்தில், ‘உங்களுக்குச் சுதந்திரம் கொடுப்பதாக முடிவாகிவிட்டது. அதை எப்படிக் கொடுப்பது என்றுதான் தெரியவில்லை. நீங்கள் அதை எப்படி வாங்கிக் கொள்வீர்கள்?’ என்று மவுன்ட்பேட்டன் கேட்டார்.அதைக் கேட்டபோது நேருவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை? நாங்கள் சுதந்திரம் கொடுத்துவிட்டோம் என்பதற்கு என்ன அடையாளம்? அதற்கு ஏதாவது நடைமுறை உள்ளதா? என்ற மவுன்ட்பேட்டன் கேள்விக்கு நேருவிடம் பதில் இல்லை.உடனே ராஜாஜியை அழைத்து இதற்கு நீங்கள்தான் ஒரு தீர்வு எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நேரு கேட்டார். ராஜாஜி ஒரு தமிழர். அவர், தமிழ்நாட்டில் ராஜாக்கள் ஆட்சி செய்த போது புது ராஜாவுக்கு ராஜபட்டாபிஷேகம் செய்யும் சமயத்தில் கையில் செங்கோல் கொடுப்பார்கள். அதுதான் புது ராஜாங்கம் தொடங்கியதற்கு அடையாளம்.நாம் பிரிட்டிஷ்காரர்களிடம் இருந்து ராஜாங்கத்தை வாங்குவதைவிட, நம் தமிழ்நாட்டில் உள்ள குருவின் கையால் செங்கோலை வாங்கினால் நல்லது என்று தீர்மானித்தார் ராஜாஜி’ இப்படி எழுதி இருந்தது.இந்த மாதிரியான வழக்கம் ராஜாக்கள் நம் நாட்டிலிருந்தபோது நடைமுறையிலிருந்தது. அவர்கள் அழிந்தபோது அந்த நடைமுறையும் அழிந்துவிட்டது. சத்ரபதி சிவாஜி, அரியணையில் அமரும்போது அவருக்கு யார் பட்டாபிஷேகம் செய்து வைப்பது என்ற கேள்வி எழுந்தது?ஆனால், தமிழ்நாட்டில் அந்த அதிகாரம் ஆதீனங்களுக்கு இருக்கிறது. அதனடிப்படையில் தான் திருவாவடுதுறை ஆதீனம் மூலமாக பிரிட்டிஷ்காரர் ஆட்சியை மாற்றியதன் அடையாளமாக நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது.இந்தச் செய்தியை என் அனுபவக் கட்டுரையில் எழுதினேன். அப்போது இதன் மூலம் ஒரு மகத்தான செயல் நாட்டில் ஏற்படப்போகிறது என்பது எனக்குத் தெரியாது.அப்போது அதைப் படித்துவிட்டு பத்மா சுப்பிரமணியம் பேசினார். ‘இதை அப்படியே விட்டுவிடக் கூடாது. 75 ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப் போகிறார்கள். அப்போது இந்தச் செங்கோலுக்கு விழா எடுக்க வேண்டும்’ என்றார்.தேடிய போது அந்தச் செங்கோல் அலகாபாத் நேரு அருங்காட்சியகத்தில் இருப்பதாக ஒரு புகைப்படம் கிடைத்தது. அதில் நேருவின் கைத்தடி என்று எழுதிவைத்துவிட்டார்கள். பத்மா சுப்பிரமணியம் எனக்குத்தான் மெயில் அனுப்பினார். நான் தான் அதை எனது இமெயில் முகவரியிலிருந்து பிரதமர் மோடிக்கு அனுப்பினேன். அவர் என்னை அழைத்துப்பேசினார். அதன்பின்னர் அது பற்றி ஆய்வு செய்தோம். ஆறு மாதம் இந்த வேலை நடந்தது. அதில் நமக்கு என்னென்ன ஆதாரங்கள் தேவையோ அவை எல்லாம் கிடைத்தன. அந்தக் காலத்தில் டைம் பத்திரிகையில் இதைப் பற்றி எழுதி இருந்ததைக் கண்டுபிடித்தோம். 24 ஆகஸ்ட் 1947இல் அந்தச் செய்தி வெளியாகி இருந்தது.இதைப் போல 12 ஆதாரங்கள் கிடைத்தன. அதைப் பிரதமர் கவனத்திற்குக் கொண்டு போனோம். அவர் இதற்கு உரிய மரியாதையை மீண்டும் தர வேண்டும் என்று விரும்பினார். தமிழ்நாட்டிலிருந்து அனைத்து ஆதீனங்களையும் அழைத்துவர வேண்டும் என்றார்.அதன்படி திட்டமிட்டு, அவர் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவில் அதை அவையின் நடுவில் கொண்டு போய் வைத்தார் பிரதமர். வைத்தது மட்டும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற அவை தொடங்கும் போது ஜனாதிபதி உரைக்கு முன்பாக அந்தச் செங்கோல் கொண்டு செல்லப்பட வேண்டும் என ஒரு திட்டத்தையும் வகுத்தார்” என்று பேசி இருக்கிறார் குருமூர்த்தி.

 

Related Articles

Back to top button
Close
Close