fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

திருவாரூரில் இடைத்தேர்தல் குறித்து விளக்கம் அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு !

திருவாரூரில் இடைத்தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? என்பது குறித்து ஆய்வு செய்து இன்று மாலைக்குள் அறிக்கை தர வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

எனவே கலைஞர் கருணாநிதி மறைவையடுத்து, காலியாக அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு வருகிற ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை 30 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில், கஜா புயல் பாதிப்பு இருப்பதால், தேர்தலை ஒத்திவைக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார்.

திருவாரூரில், கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், தற்போதைய சூழ்நிலையில் இடைத்தேர்தல் நடந்தால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக அவர் அளித்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்த நிலையில் விரைவில் இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ, திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, இதுகுறித்து ஆய்வு செய்து இன்று மாலைக்குள் அறிக்கை தரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை கிடைத்ததும் தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து அனைத்துக் கட்சியினரின் கருத்துகளை மாவட்ட தேர்தல் அதிகாரி கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close