fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜெயலலிதாவின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் பற்றின விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும் என புகழேந்தி என்பவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ஜெயலலிதாவிற்கு எவ்வளவு சொத்துக்கள் உள்ளன, எவ்வளவு கடன் உள்ளன என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மற்றும் தமிழக அரசு ஆகியோருக்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளி வைத்தார்.

சென்னை கே.கே.நகரை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகியான புகழேந்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. ஐதராபாத்தில் திராட்சை தோட்டம், வீடு, சென்னை போயஸ் கார்டன் வீடு, கோட நாடு எஸ்டேட் என்று சுமார் ரூ.913 கோடிக்கு மேல் சொத்து உள்ளன. சொத்துக்கள் யாருக்கு என்று ஜெயலலிதா உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை. அதனால், இந்த சொத்துக்களை எல்லாம் நிர்வகிக்க ஒரு நிர்வாகியை உயர் நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக பல ஆயிரம் கோடி மதிப்புடைய அசையும், அசையா சொத்துக்களுக்கு உரிமை கோரி அவரது உறவினர்கள் தீபா, தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் உள்ளதால், இந்த சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க முடியாது என்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கப் போவது யார்? என கேள்வி எழுப்பியது. அத்துடன், ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தீபா, தீபக் ஆகியோர் உள்ளதால் இதுகுறித்து அவர்கள் நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது

மேலும், மனுதாரரான புகழேந்தி ஜெயலலிதாவின் எந்த சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று கேட்கிறார் என்பது அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்த வருமானத்தை மீறிய வகையிலான சொத்துக்களையா? அல்லது, ஜெயலலிதா தனது வேட்பு மனு தாக்கலின் போது கணக்கு காட்டி இருந்த சொத்துக்களையா? என இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த இரண்டு வகையான சொத்து விவரங்களையும் ஜனவரி 2-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் முன்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் மொத்த சொத்து விவரங்களை தெரிந்து கொள்ள முடியாத நிலை நீடிப்பதால் அவரது சொத்து மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை மற்றும் பொருளாதார அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close