DGPசங்கர் ஜிவால் ஓய்வுக்கு பின் புதிய பொறுப்பு…
தமிழகத்தின் டிஜிபியாக இருந்து வரும் சங்கர் ஜிவால் வரும் 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அவர் 2023 ஆம் ஆண்டு தமிழகத்தின் டிஜிபியாக பணியமர்த்தப்பட்டார். இந்த நிலையில் அடுத்த டிஜிபியாக யார் பதவியேற்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது இதற்கிடையில், சங்கர் ஜிவால் ஓய்வு பெறுவதற்கான ஆவணங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர்ஜிவால்,டெல்லியில் பட்டப்படிப்பை முடித்தார்.அதனைத் தொடர்ந்து, யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று தமிழகக் காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தமிழகத்தில் இதுவரை பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சென்னை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால், அப்போது டிஜிபியாக இருந்தசைலேந்திரபாபு ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். தற்போது டிஜிபியாக உள்ள சங்கர் ஜீவால், ஓய்வு பெற்ற பின்பு புதிதாக உருவாக்கப்படவுள்ள தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், அடுத்த டிஜிபியாக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற பட்டியலில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான சந்தீப்ராய் ரத்தூர், சீமா அகர்வால்,வெங்கட்ராமன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதில் சந்தீப்ராய் ரத்தூர் தமிழக போலீஸ் பயிற்சி கல்லூரி டிஜிபியாகவும், சீமா அகர்வால் தீயணைப்பு துறை இயக்குநராகவும், வெங்கட்ராமன் நிர்வாகப் பிரிவு டிஜிபியாகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.