fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

இஸ்லாமியர்கள் விஷயத்தில் அதிமுக அரசு பாராமுகமாக செயல்படுகிறது : ஜவாஹிருல்லா!

டெல்லி மாநாட்டில் பங்கேற்க சென்ற தமிழகத்தை சேர்ந்த 400 பேர் ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கி உள்ளனர்.

அவர்கள் அனைவரும் சுல்தான்புரியில் உள்ள ஒரு முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில், முறையாக உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், முகாமில் தங்கியிருந்த கோவையை சேர்ந்த முஸ்தபா என்பவர் உடல்நலக்குறைவால் நேற்று  உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி தெரிவித்துள்ள மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ,

டெல்லியில் தமிழகத்தை சேர்ந்த பொறியாளர் முஸ்தபா மரணமடைந்துள்ளார். இவர் தமிழக அரசின் சிப்காட் நிறுவனத்தில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர், தற்சமயம் கோவை குனியமுத்தூர் பகுதியில் வசித்து வருபவர்.

டெல்லியில் நடைபெற்ற தப்லீக் கூட்டத்திற்குச் சென்றிருந்த முஸ்தபா அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு  இரு முறை கொரோனா நோய் பரிசோதனை நடைபெற்றது.

கொரோனா தொற்று இல்லை என்று சோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன.

இச்சூழலில் அவர் டெல்லி சுல்தான்பூரில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

அந்த முகாமில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், நீரழிவு நோயாளியான இவருக்கு தேவையான மருந்துகள் கூட அளிக்கப்படுவதில்லை என்றும் இவரது மனைவி பலமுறை எனக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

இதனை பலமுறை நான் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றும் எவ்வித பலனும் இல்லை.

டெல்லியில் தமிழகத்தை சேர்ந்த கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனைக்குப் பிறகு அறியப்பட்ட 400க்கும் மேற்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லையென்றும்,

அவர்களுக்கு மருந்து உட்பட அடிப்படை தேவைகள் சரிவர அளிக்கப்படுவதில்லை என்றும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

முஸ்தாபா போல் இன்னும் இருவர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்கள் வருகின்றன.

பல்வேறு மாநில அரசுகள் அங்குள்ள தமது மாநிலத்தவர்களுக்கு தமது டெல்லி பிரதிநிதிகள் மூலமாக உதவிகள் செய்து வருகின்றன.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு மக்களுக்கு உதவும் பொறுப்பில் உள்ள தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.

டெல்லியில் உள்ள தமிழக இல்ல ஆணையாளர் மக்வானா அதிகாரப்பூர்வமாக இந்த நெருக்கடியான நேரத்தில் யாருக்கும் எந்த உதவியும் செய்ததாகத் தெரியவில்லை.

டெல்லியில் உள்ள தமிழக தப்லீக் ஜமாஅத்தினர் விஷயத்தில் தமிழக அரசு பராமுகமாக உள்ளது.

டெல்லியில் உள்ள தமிழக தப்லீக் ஜமாஅத்தினரை தமிழக அரசு தனது பராமரிப்பில் எடுத்து அவர்களைத் தமிழகத்திற்கு அழைத்து வர வேண்டும் என்று பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் மட்டுமின்றி தி.மு.க நடத்திய அனைத்து கட்சி கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உ.பி. அரசு கோட்டாவில் சிக்கி தவித்த தம் மாநில இளைஞர்கள் 4000 பேரை பேருந்தில் அழைத்து வந்தது.

இதுவரை டெல்லி தப்லீக் கூட்டத்திற்குச் சென்றவர்கள் ஐந்து பேர் மரணமடைந்துள்ளார்கள்.

இவர்களில் முஸ்தபாவை தவிர நால்வர் கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் மரணித்தார்கள்.

முஸ்தபா மட்டுமே கொரோனா தொற்று  இல்லாத நிலையில் தனிமைப்படுத்துதல் முகாமில் மரணித்துள்ளார்.

மற்றொரு துயரம் நடைபெறுவதற்கு முன்பு டெல்லியில் கொரோனா தொற்று இல்லை என்ற நிலையில் தனிமைப்படுத்துதல் முகாமில் உள்ள தப்லீக் சகோதரர்களை  தமிழகத்திற்கு அழைத்து வர தமிழக முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்”

இவ்வாறு தனது அறிக்கையில் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close