fbpx
Others

வெள்ளத்தில் தத்தளிக்கும் தூத்துக்குடி 100 கிராமங்கள் துண்டிப்பு,முழு வீச்சில் மீட்பு பணிகள்.

தூத்துக்குடி, நெல்லையில் பெய்த கனமழைக்கு 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. 25 கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் வெளியில் வரமுடியாமல் தவித்து வருகின்றனர். சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. தூத்துக்குடி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சர்கள், அதிகாரிகள் முகாமிட்டு தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குமரிக் கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உருவான வளி மண்டல மேலடுக்கு காற்று சுழற்சி அதே இடத்தில் நிலை கொண்டது. இதனால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத அதீத கனமழை கொட்டிதீர்த்தது.மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் கன மழை பெய்ததால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டன. காட்டாற்று வெள்ளம், குளங்கள் உடைப்பால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேறியது. இதனால் ஆறு செல்லும் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடானது. தொடர் கனமழை காரணமாக 20க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் கண்மாய்கள் உடைந்துள்ளன. இதன்காரணமாக பல்வேறு கிராமங்களில் மழைவெள்ள நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.

இந்த மழைவெள்ளத்தால் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. இங்கு மின்சார வசதி, போக்குவரத்து வசதி, தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளது. 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலைகளில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிகளுடன் நடுவழியில் நிற்பதாகவும், எந்தப் பக்கமும் போக முடியாமல் அவர்கள் 2 நாட்களாக தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 4 மாவட்டங்களிலும் முக்கிய சாலைகளில் வெள்ளம் மற்றும் சேதம் ஏற்பட்டுள்ளதால் முக்கிய பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.பல சாலைகளை காணவில்லை. தூத்துக்குடி-நெல்லை சாலைகளில் உள்ள பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை கனமழை, வெள்ளத்துக்கு 10 பேர் பலியாகி உள்ளனர்.இந்நிலையில், குமரிக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகர்ந்து சென்றுவிட்டதால் குமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மழை குறைந்தது. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் படிப்படியாக வெள்ளம் குறைந்து வருகிறது.சாத்தான்குளம், கோவில்பட்டி உள்ளிட்ட மாவட்டங்களின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளது. இதனால் அங்கு இயல்புநிலை படிப்படியாக திரும்பி வருகிறது. பல கிராமங்களில் குளம், கண்மாய் உடைந்து தண்ணீர் வெளியேறி விட்டது. இதனால் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்திருந்தது. தற்போது முழுமையாக வடியத் தொடங்கிவிட்டது.இதையடுத்துஅங்குநிவராணப்பணிகள்துரிதப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் களத்தில் இறங்கி பொதுமக்களை மீட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், ஆத்தூர், திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டினம், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகள் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் வெள்ளம் சூழ்ந்து மக்கள் வெளியே வராத வண்ணம் சிக்கி தவித்து வருகின்றனர். தாழ்வான பகுதி என்பதாலும், கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டதாலும் தூத்துக்குடி நகரில் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இங்கு சிக்கி உள்ள மக்களை படகுகள் மூலம் மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் மீட்பு பணிகளில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 600கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து மீனவர்களும் படகுகளுடன் வந்து மீட்பு பணில் ஈடுபட்டு வருகின்றனர்.மழையால் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, நாங்குநேரி, களக்காடு, தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம், வல்லநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, மனத்தி, குருகாட்டூர், குரும்பூர், சோனகன் விளை, ஏரல் சாயர்புரம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள், வாழை பயிர்கள், உளுந்து என பல நூறு ஏக்கர் பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் வடிந்து வருவதால் 4 மாவட்டங்களுக்கு இடையே 90% அரசு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டது. தென் மாவட்ட ரயில்கள் கோவில்பட்டியில் இருந்து இயக்கப்பட்டது. நாகர்கோவில் ரயில், விருதுநகரில் இருந்து இயக்கப்பட்டன.நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் ரூ.3000 கோடிகளுக்கு மேல் சேதம் ஏற்பட்டிருக்கும் என தெரிகிறது. இதனால் வெள்ளப் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்ககோரி டெல்லியில் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து பேசினார். டெல்லியில் இருந்து சென்னை திரும்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் இன்று தூத்துக்குடி செல்கிறார். இன்று காலை வெள்ளம் பாதித்த நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சென்று முதல்வர் ஆய்வு செய்கிறார். பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை முதல்வர் வழங்குகிறார். இதற்கிடையே மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
4 மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கர்னல் கே.பி.சிங் தலைமையில் 5 பேர் கொண்ட ஒன்றியக் குழுவினர் நேற்று இரவு 9.30 மணிக்கு மதுரை வந்தனர். இவர்கள் கார் மூலம் புறப்பட்டு வெள்ள சேதங்களை பார்வையிட சென்றனர்.

* நிறைமாத கர்ப்பிணி ஹெலிகாப்டர் மூலம் மீட்பு  தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து கனமழை கொட்டியது. மேலும் தாமிரபரணி ஆற்றில் அதிகளவு வெள்ளம் சென்றதால் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் பெருமாள், இவரது கர்ப்பிணி மனைவி அனுசுயா மயில் (27), இவரது தாய் சேது லட்சுமி (55), மகன் தாஸ் வருண் (ஒன்றரை வயது) ஆகிய நால்வரும் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் உதவி கோரி காத்திருந்தனர். இவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மதுரை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  * ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பியதுநெல்லை திசையன்விளை அருகே ஆயன்குளத்தில் உள்ள அதிசய கிணறு பல ஆயிரம் கன அடி நீரை உள்வாங்கும் என்ற பெயரை பெற்றது. இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக அந்த கிணறு நிரம்பியது. இது தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, கிணறு முழ்க வாய்ப்புகள் கிடையாது அதில் சுற்றி இருந்த ஜல்லி கற்கள் போன்றவை அடைத்து இப்படி நிகழ்ந்து இருக்கலாம் என கூறப்பட்டு வருகின்றன. கடந்த 2022ம் ஆண்டு வெள்ளத்தின் போதே அதிசய கிணறு நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.* ரயிலில் சிக்கி தவித்த 800 பயணிகள் மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளம் அருகே ரயில் தண்டவாளத்தின் அடிப்பகுதி முழுவதுமாக அரித்து சென்றது. இதனால் திருச்செந்தூரில் இருந்து கடந்த 17ம் தேதி புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த ரயிலில் சுமார் 800 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். அரசு அதிகாரிகள் உதவியுடன் நேற்று அதிகாலை 283 பயணிகள் மீட்கப்பட்டு அங்குள்ள பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இந்த மீட்புக்கு பிறகு வழியில் உள்ள சாலையில் உடைப்பு ஏற்பட்டதால் மீதமுள்ள 500 பயணிகளை மீட்க இயலாமல் போனது.இதனால் அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், நேற்று தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் அங்கு சென்று ரயிலில் சிக்கியிருந்த 500 பேரும் மீட்கப்பட்டு வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஸ்ரீவைகுண்டம் பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருந்த 300 பேரும் அங்கு வரவழைக்கப்பட்ட பின்னர் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ரயில் பயணிகளை மீட்கும் பணிகள் குறித்து ஒன்றிய அமைச்சர்அஸ்வினிவைஷ்ணவ்காணொலிமூலம்ஆய்வுசெய்தார்.ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வெள்ளம் காரணமாக சிக்கிய செந்தூர் எக்ஸ்பிரசில் பயணிகள் உணவு, கழிப்பறை வசதிகள் இன்றி சிரமப்பட்டனர். மீட்புப் பணிகள் தாமதம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் தண்டவாளம் வழியே நடந்து தாதன்குளம் வந்தனர். அவர்களுக்கு தாதன்குளம் கிராம மக்கள் உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தனர். ஊர் பிரமுகர்கள் வேன் உள்ளிட்ட வாகனங்களில் அவர்களை செய்துங்கநல்லூருக்கு அனுப்பி வைத்தனர். கிராம மக்களின் மனிதநேயத்தை கண்டு ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.* 10,361 கிலோ பொருட்களை சேர்த்த ஹெலிகாப்டர்கள்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் 11 முறை பறந்து வெள்ள நிவாரண பொருட்களை நிவாரண முகாம்களுக்கு கொண்டு சேர்த்தன. இதுவரை 10,361 கிலோ எடையுள்ள உணவு பொருட்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தண்ணீர், பால்பவுடர் மற்றும் சமைத்த உணவுகளை கொண்டு சேர்த்தன. தேவைப்பட்டால் இச்சேவை இன்றும் தொடரும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.* அடித்து செல்லப்பட்ட 3 தீயணைப்பு வீரர்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 20 பேர் 6 குழுவாக பிரிந்து பல்வேறு பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்டெடுத்து வந்தனர். ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மந்திரமூர்த்தி, ராஜ்குமார் உட்பட 3 பேர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார் திருநகரி பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். திடீரென வந்த வெள்ளத்தில் மூன்று பேரும் படகுடன் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது..

Related Articles

Back to top button
Close
Close