fbpx
Others

விபசார வழக்கில் ரூ.3,000 லஞ்சம்- திருச்சி பெண் எஸ்ஐ ரமா–அதிரடி கைது

விபசார வழக்கை சாதகமாக முடித்து தர பேரம் பேசி ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்தவர் சரத். இவரது மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது விபசார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை அஜிதாவிற்கு சாதகமாக முடித்து தரவும், குண்டாஸ் பதிவு செய்ய பரிந்துரை செய்யாமல் இருக்கவும் விபசார தடுப்பு பிரிவு எஸ்ஐ ரமா (53) ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதற்கு அஜிதா தன்னால் ரூ.10 ஆயிரம் தர முடியாது என்றுகூறியிருக்கிறார் .இதையடுத்து எஸ்ஐ ரமா அட்வான்சாக ரூ.3000 கொடுத்தால்தான் வழக்கை உனக்கு சாதகமாக முடித்து தர முடியும் என்று கூறியிருக்கிறார். இதுபற்றி அஜிதா திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசாரின் ஆலோசனைப்படி நேற்று காலை ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் நோட்டுகளை எஸ்ஐ ரமாவிடம் அஜிதா கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் எஸ்ஐயை கைது செய்தனர். அவரது மொபட்டில் சோதனையிட்டதில் இருக்கைக்கு அடியில் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து எஸ்ஐ ரமா முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் அந்த பணம் ஸ்பா சென்டர் உரிமையாளர்களிடமிருந்து லஞ்சமாக பெற்றதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பறிமுதல் செய்தனர். பின்னர் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் எஸ்ஐ ரமாவை ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் அடைத்தனர். கைதான எஸ்ஐ ரமா விபசார தடுப்பு பிரிவில் கடந்த 4 வருடங்களாக பணியாற்றி வந்தார். திருச்சி மாநகரை பொருத்தவரை 60 மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகிறது. ஒரு சென்டருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை எஸ்ஐ ரமா அவரது வங்கி கணக்கில் கூகுள் பே மூலம் பெற்றதாக கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close