விஜய்—திமுகவில் என்னால் பெரிய குழப்பம்..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து வரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் கூறியிருப்பதாவது: அண்ணா பிறந்த மண்ணில் இருந்து பேசுவது பெருமை. மக்களிடம் செல் என கூறிய அண்ணாவை மறந்தது யார் ?அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றி நாட்டிற்கு நல்லது செய்யவே பிறந்தவர் அண்ணா என பாடிய எம்ஜிஆர் தனது கட்சிக் கொடியில் அண்ணாவின் உருவத்தை பொரித்துள்ளார். ஆனால் அவரது கட்சியை வைத்துக் கொண்டு இவங்க (திமுக) செய்யற வேலை இருக்கே! நமக்கும் திமுகவுக்கும் என்ன வாய்க்கா தகராறா? மக்களுக்கு நல்லது செய்கிறோம் என சொல்லி உங்களையும் என்னையும் ஏமாற்றி ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்துவிட்டு தற்போது மக்கள் நலனை மறந்தால் நாம் கேள்வி கேட்காமல் இருக்க முடியுமா? பவளவிழா பாப்பா, நீ பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா. நீ நல்லவர்போல நடிப்பதை பார்த்து நாடே சிரிக்கிறது பாப்பா (சிரிக்கிறது என்ற இடத்தில் விஜய் கையை வைத்து வாயை மூடிக் கொண்டார்). நான் பாப்பா என சொன்னதுஅன்பின்காரணமாகத்தான்.இதற்காக யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம். அழ வேண்டாம். நாம் இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை அதற்குள் அழுவதா? திமுக மீது நமக்கு தனிப்பட்ட வன்மம் ஏதும் இல்லை. ஆனால் அவர்களுக்கு நம் மீது வன்மம் இருக்கும். நாம் அதை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். திமுகவின் கொள்கையே கொள்ளைதான். இந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றில் மணல் கொள்ளையடித்துள்ளனர். இவ்வாறு திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்தார்.இந்த நிலையில்தான் தவெக கட்சிக்கு ஆலோசனை வழங்க புதிய குழுவை விஜய் உருவாக்க உள்ளாராம். பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் பிரச்சார நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட, ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறப்புக்குழுவை அவர் அமைக்கவுள்ளார். இந்தக் குழுவில், முன்னாள் காவல்துறை இயக்குனர் (DGP) மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குனர் (ADGP) உட்பட 18 ஓய்வுபெற்ற அதிகாரிகள் இடம்பெறுவார்கள். கரூர் விவகாரம் போன்ற சம்பவங்கள் இனி நடப்பதை தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்த தகவலறிந்த வட்டாரங்களின்படி, இந்தக் குழுவின் முதன்மைப் பணி, பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளின்போது பாதுகாப்பு திட்டமிடல் குறித்து கட்சியின் தொண்டர்களுக்கு பயிற்சி அளித்து, வழிகாட்டுவதாகும். விஜய்யின் பொது ஈடுபாடு அதிகரித்து வருவதால் இனிஅவர் அடிக்கடி வெளியே செல்ல வேண்டி இருக்கும். இதனால் மக்கள் அதிக அளவில் கூட வேண்டி இருக்கும். அதை எல்லாம் சமாளிக்க திட்டமிடல் அவசியம். இதையடுத்தே இந்த குழுவை விஜய் உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. பல ஆண்டு கால அனுபவம் கொண்ட ஓய்வுபெற்ற அதிகாரிகள், அச்சுறுத்தல் மதிப்பீடு, நேரத்தை கடைபிடித்தல், மேடைப் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் மேலாண்மை போன்ற விவகாரங்களில் சிறப்புப் பயிற்சிகளை வழங்குவார்கள். அரசு வழங்கும் பாதுகாப்பை மட்டும் நம்பி இருக்காமல், விஜய்க்கு ஏற்றபடி கூட்டங்களை திட்டமிடுவது அவசியம் என்று கருதி தவெக இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளதாம்.