fbpx
Others

வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால்…..

டிஜிபி எச்சரிக்கை  வட மாநில தொழிலாளர்கள் முழு பாதுகாப்புடன் அமைதியாக வசித்து வருகிறார்கள். அவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற வதந்தியை பரப்பினால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து நியூஸ் 18  தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு டிஜிபி சைலேந்திரபாபு தொலைபேசி வாயிலாக பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என தெரிவித்தார்.மேலும் தமிழ்நாடு அமைதியாக உள்ளது. வதந்திகளை பரப்புவது மிகப்பெரிய குற்றம். வதந்தி பரப்புவது தொடர்பாக இதுவரை 2 பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் எந்த நோக்கத்திற்காக வதந்தி பரப்பினார்கள் என்ற காரணம் விசாரணையில்தான் தெரியவரும் எனவும் டிஜிபி சைலேந்திர பாபு பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.முன்னதாக இது தொடர்பாக காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல் இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் விஷமிகள் சிலரால் பரப்பப்பட்டுள்ளது. அப்படி பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.  இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153(A), 505(i) (b) கீழ் தெய்னிக் பாஸ்கர் பத்திரிக்கையின் ஆசிரியர் மீது ஒரு வழக்கும், திருப்பூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 153(B), 506(ii) (b) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டபிரிவு 56(D) கீழ் தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர் என்பவர் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் செண்ட்ரல் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153, 153(A), 504, 505(1(b), 505(1(c), 505(2) கீழ் | பிரசாந்த் உமராவ் என்பவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனரின் உத்தரவின் பெயரில் தனி படை அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி முழுபாதுகாப்புடன் அமைதியாக வசித்து வருகிறார்கள்.அமைதியை சீர்குலைத்து பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திகளை பரப்புவோர் பற்றிய விவரங்கள் காவல்துறையினரால் சேகரிக்கப்பட்டு வருகிறது அவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Related Articles

Back to top button
Close
Close