fbpx
Others

வடுவூர் ஏரி தூய்மை பணி;இயக்குனர்பங்கேற்கிறார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நம்மால் முடியும் குழு, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, திருவாரூர் மாவட்ட வனத்துறை இணைந்து முன்னெடுக்கும் வடுவூர் ஏரி தூய்மை பணி வரும் 18-ந் தேதி நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் இயக்குனருமான தீபக் ஸ்ரீவத்சவா பங்கேற்கிறார். திருவாரூர் மாவட்டம் வடுவூர் ஏரி 316 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் மூலம் வடுவூர், தென்பாதி, வடபாதி, மேல்பாதி, சாத்தனூர், எடமேலையூர், எடகீழையூர், கட்டக்குடி, கருவாக்குறிச்சி, பேரையூர் ஆகிய கிராமங்களில் 1,336 ஏக்கர் நேரடியாகவும், 9,200 ஏக்கர் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. பறவைகள் சரணாலயமாக விளங்கும் இந்த ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளது. இதனை அகற்றிட புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நம்மால் முடியும் குழு, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, திருவாரூர் மாவட்ட வனத்துறையுடன் இணைந்து 30 க்கும் மேற்பட்ட. அமைப்புகள், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட 20 க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 2000 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்று ஆகாயத்தாமரை செடிகளை அகற்றுகின்றனர். இது குறித்து கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு கூறுகையில், வடுவூர் ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி அதனை மடக்கிய இயற்கை உரமாக மாற்றும் பணி 5 ஏக்கர் பரப்பளவில் நடக்கிறது. 45 நாட்களில் மட்க வைத்த பின்பு அந்த இயற்கை உரத்தை தமிழ்நாடு வனத்துறை அதிகாராகளிடம் வழங்குகிறோம். இந்த இயற்கை உரத்தை பயன்படுத்தி 5 இலட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றார்.

 

Related Articles

Back to top button
Close
Close