fbpx
Others

முதல்வர் மு.க.ஸ்டாலின் : மக்களாட்சியின் மாண்பை காக்க…!

 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின்  மாண்பை காக்கவும், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை  உணர்த்த நான் என்னுடைய சக்தியை மீறியும் செயல்படுவேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது: இருபது மாதங்களை கடந்திருக்கிறது திமுக அரசு.  அதற்குள் இமாலய  சாதனைகளை செய்திருக்கிறோம்.  நாம் கடந்துள்ள காலம் குறைவுதான்.  ஆனால் ஆற்றியுள்ள பணிகள் அதிகம்.  அதேநேரத்தில், இந்த இருபது மாத காலம் போனதே தெரியவில்லை.  இலக்கினை அடைவதை நோக்கமாக கொண்டு நாம் செயல்பட்டோம்.  மக்களின் நலன் மட்டுமே நம்முடைய சிந்தையில் நின்றது; அதுவே மக்களின் மனதை வென்றது. சமூகநீதி – சமத்துவம் – சுயமரியாதை – மொழிப்பற்று – இன உரிமை – மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் எழுப்பப்பட்ட பலம்வாய்ந்த இயக்கம்தான் திமுக. அரசியல் களத்தில் எந்த நோக்கத்தை விதைத்ததோ, அதே நோக்கம் கொண்ட மக்களாட்சியை எந்தவித சமரசத்துக்கும் இடமின்றி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நாங்கள் நடத்தி வருகிறோம்.தமிழ்நாட்டின் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் உயர்வுக்கும் வழிவகுக்கும் ‘திராவிட மாடல்’ கொள்கையை உருவாக்கி அதன் தடத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி செயல்பட்டு வருகிறது.  செயல்பட்டு வருகிறது என்பதை விட – திராவிட மாடல் ஆட்சியானது வெற்றி பெற்று வருகிறது என்பதுதான் சரியானதாகும்.‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற அடிப்படையிலேயே தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியானது அமைய வேண்டும் என்று நாம் திட்டமிட்டோம்.  தொழில் வளர்ச்சி – சமூக மாற்றம் – கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்; அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்று விரும்பினோம்.  வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். பொருளாதாரம் – கல்வி – சமூகம் – சிந்தனை – செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி. அதுதான் தமிழ்நாடு காணும் தனித்துவமான வளர்ச்சி. அத்தகைய திராவிட மாடல் சிகரத்தை நோக்கிய பயணமானது ஒரு சரித்திர  பயணமாக – ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்.கடந்த 9ம் தேதியன்று ஆளுநர்  இந்த மாமன்றத்தில் 2023-24ம் ஆண்டின் தொடக்கத்துக்கான தொடக்கவுரையை ஆற்றினார்.  தமிழ்நாடு அரசின் பன்முகக் கூறுகளை விளக்கியும், தமிழ்நாடு அரசு எந்த வகையில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை பாராட்டியும், எதிர்காலத்தில் செயல்படுத்த இருக்கக்கூடிய முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து சுருக்கமாக அறிவித்தும் தனது உரையை இந்த மாமன்றத்துக்கு ஆற்றினார்.அன்றையதினம் நிகழ்ந்தவற்றை மீண்டும் பேசி அரசியலாக்க நான் விரும்பவில்லை. அதேநேரத்தில்மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பை காக்கவும், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்த்தவும், நூற்றாண்டை கடந்த இந்த சட்டமன்றத்தின் விழுமியங்களை போற்றவும் நான் என்னுடைய சக்தியை மீறியும் செயல்படுவேன்  என்பதை இந்த மாமன்றமும் என்னை இச்சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய தமிழ் பெருமக்களும் நன்கு அறிவார்கள்.என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close