fbpx
Others

மதுரையில் அதிகாலை பயங்கரம்: ரயிலில் தீ

மதுரை ரயில் நிலையம் அருகே, உபியில் இருந்து வந்து நிறுத்தப்பட்டிருந்த ஆன்மிக சுற்றுலா ரயில் பெட்டியில் நேற்று அதிகாலை காஸ் ஸ்டவ் பற்றவைத்து டீபோட்டபோது சிலிண்டர் வெடித்து சிதறி தீப்பிடித்தது. இதில் 9 பேர் உடல் கருகி பலியாகினர். 8 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் இருந்து கடந்த 17ம் தேதி காலை 63 பயணிகளுடன் பாரத்கவுரவ் என்ற ஆன்மிக சுற்றுலா ரயில் புறப்பட்டது. லக்னோவில் பாசின் டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் இவர்கள் ஆன்லைனில் புக்கிங் செய்திருந்தனர். அந்த ரயில், கடந்த 20ம் தேதி விஜயவாடா வந்தடைந்தது. தொடர்ந்து ரேணிகுண்டா, 21ம் தேதி மைசூர், 22ம் தேதி பெங்களூரூ, 23ம் தேதி நெல்லை, 25ம் தேதி நாகர்கோவில் வந்தடைந்தனர்.  அங்கிருந்து நேற்று முன்தினம் (ரயில் எண்:16730) புனலூர் எக்ஸ்பிரசில் புறப்பட்டு நேற்று அதிகாலை 3.47 மணிக்கு மதுரை வந்தது. அவர்கள் வந்த ரயில் பெட்டி கோச் தனியாக பிரிக்கப்பட்டு, மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிமீ தூரத்தில் மதுரை – போடி செல்லும் தண்டவாள பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பகலில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை செல்ல திட்டமிட்டு இருந்தனர்.    இந்நிலையில் அதிகாலை 5.15 மணியளவில் ரயில் பெட்டியில் காஸ் ஸ்டவ்வை பற்ற வைத்து டீ மற்றும் உணவு தயாரிக்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சிலிண்டர் பயங்கரமாக வெடித்து சிதறி ரயில் பெட்டியில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பெட்டி முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது இதையடுத்து அதிலிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து வெளியில் இறங்க முற்பட்டனர். ஆனால் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் திறக்க தாமதமானது. மேலும் பெரும்பாலானோர் வயதானவர்கள் என்பதால் கீழே இறங்கி ஓட சிரமப்பட்டனர். பெர்த்தில் படுத்து சில பயணிகள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் வெளியே வர முடியாத நிலையில் உள்ளேயே தீயில் சிக்கிக் கொண்டனர். இந்த தீ விபத்தில் லக்னோவைச் சேர்ந்த பரமேஸ்வரர் தயாள் குப்தா (55), மிதிலேஷ் குமாரி (62), சந்திர மன்சிங் (65), நிதீஷ்குமாரி (62), சாந்தி தேவி வர்மா (65), குமாரி ேஹமானி, டேனியல் மனோரமா உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனை மற்றும் மதுரை ரயில்வே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பிரேத பரிசோதனை முடிந்ததும் உடல்கள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்படும். தகவலறிந்து வந்த தடயவியல் நிபுணர்கள் ரயில் பெட்டியில் சோதனை செய்தனர். அப்போது ரயில் பெட்டியில் இருந்து வெடித்து சிதறிய சிலிண்டர், ஜன்னல் அருகே சிதறிய நிலையிலும் மற்றும் 5க்கும் மேற்பட்ட மண்ணெண்ணெய் அடுப்புகள், கட்டு கட்டாக விறகுகள், நிலக்கரி மூட்டை, சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெய் டின்கள், பாத்திரங்கள் சமையல் உபகரணங்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், ரயில்வே எஸ்.பி. செந்தில்குமார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், கலெக்டர் சங்கீதா, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அனந்த், நகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் மற்றும் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு செய்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சிலிண்டர்களை சட்டவிரோதமாக ரயில் பெட்டியில் கொண்டு வந்து வழியில் சமைத்து சாப்பிட்டு வந்தது தெரியவந்தது. ரயில் பெட்டியில் தீப்பற்றியவுடன் ஒரு சிலர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். தகவலறிந்து 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து 2 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். சிறிது நேரத்தில் மீண்டும் ரயில் பெட்டியில் புகை வர தொடங்கியதால், தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தினர். தடையை மீறி கொண்டு வந்த காஸ் சிலிண்டரால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா, தப்பி ஓடியவர்கள் யார் என்பது குறித்து மதுரை ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மதுரையில் நேற்று அதிகாலை நடந்த இந்த கோர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கொள்ளையர்களுக்கு பயந்து கதவை பூட்டியதால் சிக்கல்: உயிர் பிழைத்தவர் பேட்டி  தீ விபத்தில் இருந்து தப்பிய உபி மாநிலம் லக்னோவைச் சேர்ந்த பிரவீன் குப்தா கூறுகையில், ‘‘லக்னோ உள்பட 4 பகுதிகளில் இருந்து 63 பேர், கடந்த 17ம் தேதி ஆன்மிக சுற்றுலா புறப்பட்டோம். முதலில் ஆந்திராவில் மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயில், திருப்பதி கோயில் உள்ளிட்ட முக்கியமான கோயில்களில் தரிசனத்தை முடித்து விட்டு, நாகர்கோவில், கன்னியாகுமரி சென்றுவிட்டு மதுரை திரும்பிய போது தான் விபத்து ஏற்பட்டது. அதிகாலை மதுரை வந்த நிலையில், நான் என் நண்பர் சஞ்சய் உள்ளிட்ட சிலர் மட்டுமே ரயில் பெட்டிக்கு வெளியே வந்திருந்தோம். பெட்டியில் எங்களுக்கு சமையல்காரர் தீரஜ் குப்தா டீ மற்றும் ஸ்நாக்ஸ் தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென தீப்பற்றியது. கொள்ளை அச்சம் காரணமாக பெட்டியில் இருந்த 4 கதவுகளில் 3 கதவுகளை மூடி வைத்து விட்டு ஒரு கதவை மட்டும் திறந்து வைத்திருந்தோம். இதனால் அனைவரும் உடனடியாக வெளியே வரமுடியவில்லை. அந்த நேரத்தில் பெட்டி முழுவதும் தீப்பற்றியது. தப்பித்து வெளியே வந்தபோது சிலிண்டர் வெடித்து சிதறியது. நாங்கள் கூச்சலிட்டு கொண்டே அனைவரையும் காப்பாற்ற முயற்சித்தோம். அந்த நேரத்தில் தீ மளமளவென பற்றியது. 15க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கிக் கொண்டனர். நாங்கள் கூச்சலிட்டத்தை பார்த்து அருகே இருந்த மக்கள் உதவிக்கு வந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் வந்து உதவினர்’’ என்றார்.   சிகரெட்டுக்கே தடை சிலிண்டர் வந்தது எப்படி?  மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘ரயில் நிலையங்களில் சுற்றுலா ரயில் பயணிகளுக்கென தனியாக இடம் ஒதுக்கப்படும். அவர்கள் தங்கி ஓய்வெடுக்கவும், கழிப்பறை மற்றும் குளிக்க தனி வசதி செய்து கொடுக்கப்படும். ஆனால் தெற்கு பகுதியில் முக்கிய ரயில் நிலையமான மதுரையில் சுற்றுலா ரயில் பயணிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கப்படவில்லை. மேலும் ரயில் பெட்டிகளில் சிகரெட், தீப்பெட்டி எடுத்துச் செல்லவே தடை உள்ள நிலையில், எவ்வாறு லக்னோவில் இருந்து காஸ் சிலிண்டர், காய்கறி, அரிசி மூட்டைகளுடன் வந்தனர் என தெரியவில்லை. ரயில்வே போலீசார் கண்காணித்திருக்க வேண்டும். டிக்கெட் பரிசோதகர்கள் கவனம் செலுத்தவில்லையா என தெரியவில்லை. இனிவரும் காலங்களில் இதுபோன்ற அலட்சியம் இருக்க கூடாது என அதிகாரிகளை எச்சரித்து இருக்கிறோம்’’என்றனர். ரூ10 லட்சம் நிவாரணம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் சட்டவிரோதமாக சிலிண்டரை பயன்படுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெட்டியில் 3 சமையல் காஸ் சிலிண்டர்கள் வைத்திருந்ததால், தீ மளமளவென பரவியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ2 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ50 ஆயிரம் வழங்கப்படுமென தெரிவித்துள்ளது.  ரூ3 லட்சம் நிதியுதவி முதல்வர் அறிவிப்பு   முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்குக் கொண்டுசெல்ல தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, தலா ரூ3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.   உ.பி அரசுக்கு தகவல்
மதுரை கலெக்டர் சங்கீதா கூறுகையில், ‘‘ரயிலில் சட்டவிரோதமாக சிலிண்டர் எடுத்து வரப்பட்டது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உபி மாநில அரசுக்கு தெரிவித்து விட்டோம். காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல் சிறு காயமடைந்தவர்கள், விபத்தில் இருந்து தப்பியவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளோம். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது’’, என்றார்.   உயர் மட்டக்குழு அமைப்பு
ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்த கலெக்டர் சங்கீதா 10 பேர் கொண்ட உயர் மட்ட குழுவை அமைத்துள்ளார். மேலும் விபத்து தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள 93605-52608, 80156-81915 என 2 உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.   தப்பி ஓடியதில் தவறி விழுந்த முதியவர் காயம்
தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறும் ஹரீஷ் வர்மாவின் (22) தாத்தா ராம் மனோகர் வர்மா கூறுகையில், ‘‘எனது பேரன், தீ விபத்தில் ஏற்பட்ட புகைமூட்டத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று காலை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, செல்வதாக இருந்தோம். தீ விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக ஓடியதில் கீழே விழுந்து காயம் ஏற்பட்ட நண்பர் நிர்மல்குமார் வர்மா (62) என்பவரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்’’ என்றார்.   காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை: அமைச்சர் பேட்டி    தீ விபத்தில் சிக்கி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மதுரை ரயில்வே மருத்துவமனையில் 6 பேர், மதுரை அரசு மருத்துவமனையில் 2 பேர் என மொத்தம் 8 பேருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.  அதிகாலையில் அலறல் சத்தம்
விபத்து நடந்த இடத்துக்கு அருகே வசிக்கும் மன்னன் பிரகாஷ் என்பவர் கூறுகையில், ‘‘அதிகாலையில் பெண்களின் பயங்கர அலறல் சத்தம் மேட்டது. பதறியடித்துக் கொண்டு போய் பார்த்தோம். ரயில் பெட்டி மளமளவென தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் கொடுத்தோம். போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்’’ என்றார்.  விபத்தில் பலியான 9 பேர் யார்? யார்?
1. பரமேஸ்வர் தயால் குப்தா (57, ஆண்)
2. மிதிலேஷ் குமாரி (வயது 52, பெண்)
3. ஹேமானி பன்ஷால் (22, பெண்)
4. சாந்தி தேவி வர்மா (67, பெண்)
5) அங்குல் ஹஷ்யம் (36, ஆண்)
6) மனோரமா அகர்வால் (81, பெண்)
7) சத்ரூ தமன் சிங் (65, ஆண்)
8) தீபக் கசியம் (20, ஆண்)
9) ஹரீஸ் குமார் பாஸிம் (60, ஆண்)

லக்னோ ஏஜென்ட் கைதாவார்: ஏடிஜிபி வனிதா பேட்டி
விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தபின் ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா கூறுகையில், டிராவல்ஸ் நிறுவன ஏஜென்டை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். 3 காஸ் சிலிண்டர்களுடன் ரயிலில் பயணித்ததை இப்போது தான் பார்க்கிறோம். ரயில் நிலையத்திலிருந்து தூரமாக இந்த ரயில் நிறுத்தப்பட்டிருந்ததால் சோதனை நடத்தப்படவில்லை. ரயில்வே பாதுகாப்பு படையினர் நேரில் வந்து விபத்து குறித்து விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர் என்றார்.   லக்னோ ஏஜென்ட் கைதாவார்: ஏடிஜிபி வனிதா பேட்டி
விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தபின் ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா கூறுகையில், டிராவல்ஸ் நிறுவன ஏஜென்டை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். 3 காஸ் சிலிண்டர்களுடன் ரயிலில் பயணித்ததை இப்போது தான் பார்க்கிறோம். ரயில் நிலையத்திலிருந்து தூரமாக இந்த ரயில் நிறுத்தப்பட்டிருந்ததால் சோதனை நடத்தப்படவில்லை. ரயில்வே பாதுகாப்பு படையினர் நேரில் வந்து விபத்து குறித்து விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர் என்றார்.  முதல்வர் நிவாரண நிதி: அமைச்சர்கள் வழங்கினர்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் அறிவித்த ரூ.3 லட்சம் நிவாரண நிதியை பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வழங்கினர்.  இன்று பொது விசாரணை  ரயில் விபத்து தொடர்பாக பெங்களூரூ தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி இன்று மதுரையில் பொது விசாரணை நடத்த இருக்கிறார். இந்த விசாரணை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக முதல் மாடியில் உள்ள கூட்ட அரங்கில் இன்று காலை 9.30 மணிக்கு துவங்கி நடைபெறும். விசாரணையில் விபத்து பற்றி தெரிந்த பொதுமக்கள், தங்களுக்கு தெரிந்த தகவல்களை நேரடியாக தெரிவிக்கலாம்.  கணவரின் உடலை பார்த்து மனைவி கதறல்   இறந்தவர்களின் உடல்கள் மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன. அவர்களை அடையாளம் காட்ட உறவினர்கள், அழைத்து வரப்பட்டனர். அதில் பரமேஷ்வர் குமார் குப்தா (55) அணிந்திருந்த மோதிரத்தை வைத்து, அவரது மனைவி ரேணு குப்தா அடையாளம் காட்டினார். அப்போது கதறி அழுத அவரை உறவினர்கள் தேற்றினர்.லக்னோ சுற்றுலா ஏஜென்ட் மீது வழக்கு பதிவு   சட்ட விரோதமாக சிலிண்டர்கள் மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் கொண்டு வந்தது தொடர்பாக, லக்னோவை சேர்ந்த பாசின் டிராவல்ஸ் உரிமையாளர் மீது, மதுரை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close