fbpx
Others

மக்களவை சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு வரமாட்டேன்அதிரடி முடிவு..!

 நாடாளுமன்றத்திற்கு வரமாட்டேன் என அதிருப்தியில் உள்ள மக்களவை சபாநாயகர் அறிவித்துள்ளார். மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால் பிரதமர் மோடி இதுவரை நாடாளுமன்றத்திற்கு வந்து விளக்கமளிக்கவில்லை. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் கடந்த 9 நாட்களாக முடங்கின. பிரதமரை அவையில் பேசவைக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் சார்பில் கடந்த வாரம் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவளித்தன. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் வரும் 8, 9ம் தேதியும், அந்த விவாதத்தின் தொடர்ச்சியாக வரும் 10ம் தேதி பிரதமர் மோடி பதிலளித்து பேசுவார் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. மக்களவையில் பெரும்பான்மை பலம் இருப்பதால், பல்வேறு மசோதாக்களை ஒன்றிய அரசு தாக்கல் செய்கிறது. எவ்வித விவாதமுமின்றி அந்த மசோதாக்களை நிறைவேற்றுகிறது. இதற்கிடையே மணிப்பூர் கொடூரங்களால் பாதிக்கப்பட்டவர்களை கடந்த சில தினங்களுக்கு முன் நேரில் சந்தித்த ‘இந்தியா’ கூட்டணியின் 21 எம்பிக்கள் குழு, இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.    அதனை தொடர்ந்து அவை மீண்டும் காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் கூடியதும், மணிப்பூர் சம்பவத்தில் பிரதமர் விளக்கமளித்தல், டெல்லி சேவை மசோதா தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. அதனால் மக்களவை பிற்பகல் 2 மணி வரையும், மாநிலங்களவை 12 மணி வரையும் அதன் பின் பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கண்ணியமாக நடந்துகொள்ளும் வரை அவைக்கு வரமாட்டேன் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். இந்த தகவலை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பிக்களிடம் மக்களவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு தரப்பு எம்.பி.க்கள் நடந்து கொண்ட விதத்தால் அவர் அதிருப்தி என தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close