மகாராஷ்டிராவுக்கு ஒரு கருப்பு நாள்—ஏக்நாத்ஷிண்டே நடவடிக்கை எடுக்கப்படும்..
புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, அஜித் பவார் 28/1/26 காலை சிறிய ரக தனியார் விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், பாராமதி பகுதி அருகே விமானம் தரையிறங்க முயன்ற போது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த விபத்தில் விமானம் உடனடியாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. காலை 8.45 மணியளவில் ஏற்பட்ட இந்த கோர விபத்தில், அஜித் பவார் உள்பட விமானத்தில் பயணம் செய்த அவரது பாதுகாவலர்கள் இருவர் மற்றும் விமானிகள் இருவர் என மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.67 வயதான அஜித் பவார், நாட்டின் மூத்த அரசியல் தலைவர் சரத் பவாரின் அண்ணன் அனந்த்ராவ் பவாரின் மகன் ஆவார். அவர் மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக ஆறு முறை பதவி வகித்துள்ளதுடன், நிதித்துறை, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார். சரத் பவாரின் அரசியல் வாரிசு தொடர்பான முரண்பாட்டைத் தொடர்ந்து, அஜித் பவார் தனித்து அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்தார். அவரது தலைமையிலான பிரிவையே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.தற்போது மகாராஷ்டிராவில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசில், அஜித் பவாரின் கட்சி மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது. அஜித் பவாரின் திடீர் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்
தலைவர்கள், தேசிய மற்றும் மாநில அளவில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர துணை முதல்வரும் சிவ சேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, “அஜித் பவார் எனக்கு மூத்த சகோதரர் போன்றவர். அவரது மறைவு மகாராஷ்டிராவுக்கு ஏற்பட்ட பேரிழப்பு. மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக நாங்கள் இருவரும் ஒரே குழுவாக இணைந்து பணியாற்றினோம். இன்று அந்த குழுவின் ஒரு முக்கிய அங்கம் இல்லாமல் போய்விட்டது.இந்த நாள் மகாராஷ்டிராவுக்கு ஒரு கருப்பு நாளாக அமைந்துள்ளது. அஜித் பவார் தெளிவாகவும், சரளமாகவும் பேசக்கூடியவர். கடின உழைப்பும் திறமையும் கொண்ட நேர்மையான தலைவர். ‘பார்க்கலாம், யோசிக்கலாம்’ போன்ற வார்த்தைகள் அவரது அகராதியில் இல்லை. எதைச் செய்ய வேண்டுமென்று முடிவு செய்தால், அதை உடனடியாக நிறைவேற்றுவார். தவறான திட்டம் என நினைத்தால், அதற்கு ‘இல்லை’ என்று சொல்ல அவர்ஒருபோதும்தயங்கியதில்லை. மகளிருக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டத்தை நாங்கள் ஒரே குழுவாக தொடங்கினோம். அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.நேரத்துக்கு மிகுந்த மதிப்பு கொடுக்கும் மனிதர் அவர். மக்களைச் சந்திப்பதற்காக காலை 6 மணிக்கே நேரம் ஒதுக்கிய சம்பவங்களும் உண்டு. விடாமுயற்சியும் துணிச்சலும் ஒழுக்கமும் கொண்ட தலைவரை நாம் இழந்துவிட்டோம். இந்த விமான விபத்து தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், இதுபோன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில்தேவையானநடவடிக்கைகள்எடுக்கப்படும் என்றும் ஏக்நாத் ஷிண்டே உறுதியளித்தார். மேலும், இந்த துயரமான தருணத்தை எதிர்கொள்ள அஜித் பவாரின் குடும்பத்தினருக்கு தைரியமும் மனவலிமையும் கிடைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்..