fbpx
Others

போக்குவரத்து விதிமீறல் அபராத ஐகோர்ட்டில் வழக்கு

 போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து, பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து, தமிழக அரசு, கடந்த அக்டோபர் 19ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதன்படி தலைக்கவசம் (ஹெல்மேட்) போடாமல் சென்றால் ரூ.1000 அபராதம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000 என அபராதத்தொகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த அரசாணை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து அரசு அக்டோபர் 19-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன் மூலம், தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பிற பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாலைகளின் தரம், போக்குவரத்து நெரிசல், இயந்திர கோளாறு, கவனக்குறைவுடன் வாகனம் இயக்குவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது ஆகியவை சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராத தொகையை அதிகரித்திருப்பதன் மூலம், அதை அமல்படுத்துவதாகக் கூறி காவல்துறையினர், அப்பாவி மக்களை துன்புறுத்துவர். எனவே விதி மீறல்களுக்கான அபராதத் தொகையை உயர்த்துவதற்கு முன்பு பொதுமக்களுக்கு அரசு முறையான சாலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.எனவே, இந்த அரசாணை ரத்து செய்ய வேண்டும், அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close