fbpx
Others

போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் சமாளிக்குமா அரசு..?

நெருங்கும் பொங்கல்... போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் - எப்படி சமாளிக்கப் போகிறது அரசு?!

பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் அறிவித்திருக்கும் வேலைநிறுத்தப் போராட்டம் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.தொழிலாளர்களுடனான அரசின் அடுத்தடுத்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று (ஜன. 8) நடந்த இறுதிகட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்திருக்கிறது. இதனால் நாளை திட்டமிட்டபடி (ஜன. 9) போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள் போக்குவரத்து தொழிலாளர்கள். இதனால் பொங்கலுக்கு ஊருக்குச் செல்ல காத்திருக்கும் பொதுமக்களும் கலக்கமடைந்திருக்கின்றனர்.  அரசு போக்குவரத்து கழகம்

நிறைவேற்றப்படாத கோரிக்கைகளும் திடீர் போராட்ட அறிவிப்பும்:

`தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பும்போது கருணை அடிப்படையில் நிரப்ப வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள அகவிலைப் படியை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், போக்குவரத்துத்துறையில் வரவுக்கும் செலவுக்கும் இடையில் ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, ஐ.என்.டி.யு.சி, பி.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் அறிவிப்பை வெளியிட்டனர்.தொடர் தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை முயற்சிகள்:  இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்நாடு அரசு, போராட்டத்தை வாபஸ் பெற வைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது. குறிப்பாக போக்குவரத்துத்துறை, தொழிலாளர் நலத்துறை ஆணையம் மூலமாக பேச்சுவார்த்தையில் இறங்கியது. தேனாம்பேட்டை டிஎம்ஸ் வளாகத்திலுள்ள தொழிலாளர் நலத்துறை ஆணைய அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்ற அரசின் முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்ததாக ஜனவரி 3-ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

வேலை நிறுத்தம் – போக்குவரத்து தொழிலாளர்கள் முடிவு

குறிப்பாக அரசு நிர்வாகங்கள் தரப்பில், “பொங்கல் சூழலில் வேலைநிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் பணிக்கு வர வேண்டும். ஓய்வூதியப் பிரச்னை என்பது நீண்டகாலப் பிரச்னை என்பதால் இவற்றையெல்லாம் தீர்க்க கால அவகாசம் தேவைப்படும். எனவே, இந்த கோரிக்கைகள் தொடர்பாக பொங்கலுக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளலாம். அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை வரும் ஜனவரி 19-ம் தேதி வைத்துக்கொள்ளலாம்!” என பேச்சுவார்த்தைக்கு வந்த போக்குவரத்து தொழிலாளர்களிடம் ஆலோசனை வழங்கப்பட்டது.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்–

ஆனால் இதை ஏற்க மறுத்த தொழிற்சங்கங்களில் பிரதிநிதிகள், “கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே இவற்றுக்குத் தீர்வு காண மேலும் அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. பொங்கலுக்குள் பிரச்னைகளைத் தீர்க்க ஒரு தெளிவான முடிவெடுக்கவில்லை எனில் திட்டமிட்டபடி வரும் ஜன. 9-ம் தேதி காலவரையற்றை வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை!” என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டன. அதைத்தொடர்ந்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நடத்திய பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.

இன்றே கடைசி, அமைச்சர் அவசர ஆலோசனை:

இந்த இக்கட்டான சூழ்நிலையில், பொங்கலுக்குப் பிறகு வரும் 19-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளலாம் என்ற அரசின் நிலைப்பாட்டை மாற்றி, பொங்கலுக்கு முன்னதாகவே போராட்டத்தின் முதல்நாளான இன்று (ஜன. 8) முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்தலாம் என போக்குவரத்துத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தநிலையில், சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தலைமை செயலகம்

அதேநேரம், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றவேண்டுமென்றால் கூடுதல் நிதி செலவாகும், முக்கிய கோரிக்கையாக சுமார் 90,000 ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வேண்டும் என்பதாக இருப்பதால் அதை நிறைவேற்றுவதற்கு போக்குவரத்துத் துறைக்கு மாதந்தோறும் கூடுதலாக ரூ.75 கோடிவரை நிதி செலவாகும் என கூறப்படுகிறது. ஏற்கெனவே போக்குவரத்துத்துறை நட்டத்தில் இயங்கிவருவதால், ஆண்டுக்கு பல நூறு கோடி செலவு செய்ய நிதியில்லாமல் சிக்கித் திணறிவருகிறது.  போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்..!

இறுதிகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி:

இந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர் போராட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக சாத்தியக்கூறுகள் மற்றும் அரசின் நிதிநிலைமை தொடர்பாக தலைமைச் செயலகத்திலுள்ள நிதித்துறை அதிகாரிகளுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவசரக் கலந்தாலோசனை மேற்கொண்டார். குறிப்பாக, முதலமைச்சரின் தனிச்செயலரான உமாநாத் ஐ.ஏ.எஸ் மற்றும் நிதித்துறை செயலரான உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் ஆகியோருடன் தீவிர ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, முதலமைச்சரின் தனிச்செயலரான உமாநாத் ஐ.ஏ.எஸ் மற்றும் நிதித்துறை செயலரான உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் ஆகியோருடன் தீவிர ஆலோசனை நடத்தினார். ஆனால், பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை முடிவில் போக்குவரத்து தொழிலாளர்கள் கேட்பது போன்று உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது எனத் திட்டவட்டமாக அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது.  `இப்போதே போராட்டத்தை தொடங்கிவிட்டோம்!’

இதனால் அதிருப்தியடைந்த 20-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்தபடி வேலைநிறுத்தப் போராட்டத்தைதொடங்க   இருக்கின்றனர். இந்தப் போராட்டத்தில் தி.மு.க-வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் (தொ.மு.ச) மட்டும் பங்கேற்கவில்லை. இருந்தபோதும் அவர்களை வைத்து கால்பகுதி பேருந்துகளைக்கூட இயக்க முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதால், அரசாங்கம் இதை எப்படி சமாளிக்கப்போகிறது, பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்கு எப்படி தங்கள் ஊர்களுக்குப் பயணம் செய்வார்கள் என்ற பலகேள்விகள் எழுந்துவருகிறது. இந்தநிலையில், பெரம்பூர் டிப்போ அரசுப் பேருந்து நடத்துனரும், சி.ஐ.டி.யூ துணைத் தலைவருமான மதியிடம் பேசினோம். “அரசாங்கம் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று சொல்லிவிட்டது! எனவே நாளையோ நள்ளிரவோ அல்ல இப்போதே எங்கள் போராட்டத்தை தொடங்கிவிட்டோம்.  சி.ஐ.டி.யூ துணைத் தலைவர்  மதி   குறிப்பாக, ஐயப்பன்தாங்கல், வடபழனி டிப்போக்களில் உள்ள போக்குவரத்துத் தொழிலாளர்கள் இப்போதே தங்களின் டிப்போக்களுக்கு பேருந்துகளை திருப்பிக்கொண்டு இருக்கிறார்கள். மேலும், தொ.மு.சவால் முழு பேருந்துகளையும் இயக்கமுடியாது. அரசாங்கம் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாதபடி சிலரை மிரட்டி கையெழுத்து வாங்கியும், வெளியிலிருந்து தனியார் ஓட்டுநர்களை தற்காலிகமாகப் பணியமர்த்தியும் பேருந்துகளை இயக்க முயற்சிக்கும். அப்படியிருந்தாலும் நாளை 30% பேருந்துகளை மட்டுமே இயக்க முடியும். அதன்பிறகு ஷிப்ட் கணக்கு, வேலைப்பளு, ஆள்பற்றாக்குறை காரணங்களால் ஒவ்வொருநாளும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டேப் போகும்!” என அதிர்ச்சி தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை அரசு எப்படி சமாளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!  thanks T.S

Related Articles

Back to top button
Close
Close