fbpx
Others

பொது சிவில் சட்டம்–4 ஒன்றிய அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்பு…

பொது சிவில் சட்டம் தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், 4 ஒன்றிய அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி துவங்கவுள்ளதாக ஒன்றிய அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வரை பழைய கட்டிடத்திலேயே நடைபெறவுள்ள இந்த கூட்டதொடரில், எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்னைகளை கிளப்ப திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய அலுவல்களை சுமூகமாக நடத்தி முடிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், கூட்டத்தொடர் துவங்கும் முன் வழக்கமாக நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டம் 19ம் தேதி நடைபெறும் என, ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவும், அனைத்துக் கட்சிகளின் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தவுள்ளார். பொதுவாக நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்புதான் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்படும். ஆனால் இம்முறை 11 நாட்களுக்கு முன்னதாகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதனால் இந்த கூட்டத் தொடரில் முக்கிய சட்டங்களை கொண்டு வருவது தொடர்பான முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஒன்றிய அரசின் சட்ட அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பொது சிவில் சட்டம் குறித்த விவாதங்கள் தொடங்கப்பட்டுள்ளன.     இந்த விவகாரத்தில் நான்கு ஒன்றிய அமைச்சர்களுக்கு வெவ்வேறு பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த அமைச்சர்களில் கிரண் ரிஜிஜு, ஸ்மிருதி இரானி, அர்ஜுன் ராம் மேக்வால், கிஷன் ரெட்டி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த அமைச்சர்களின் முதல் முறைசாரா கூட்டம் ஏற்கனவே நடந்துள்ளது. பொது சிவில் சட்டத்திற்கு சில கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. சில கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. பழங்குடியினர் தொடர்பான பிரச்னைகளில் கிரண் ரிஜிஜு, பெண்கள் உரிமைகள் தொடர்பான பிரச்னைகளில் ஸ்மிருதி இரானி, வடகிழக்கு மாநிலங்கள் தொடர்பான பிரச்னைகளில் கிஷன் ரெட்டி, பொது சிவில் சட்டம் தொடர்பான ஆலோசனைகளை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கவனித்து வருகின்றனர். இதுதொடர்பாக வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள் சிலருடனும், இந்த அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர்’ .

Related Articles

Back to top button
Close
Close