fbpx
Others

பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம்பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

 5 மாநில சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பது தொடர்பாக டெல்லியில் இன்று மாலை பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் கூடுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல்

அடுத்தாண்டு நடைபெறவுள்ளதால், ஆளும் பாஜக அரசை வீழ்த்த எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்த கூட்டணியின் மூன்றாவது கூட்டம் வரும் 31 மற்றும் செப். 1ம் தேதிகளில் மும்பையில் நடைபெறவுள்ளது. அப்போது லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக மாநிலம் வாரியாக தொகுதி பங்கீடு, ஒருங்கிணைப்பு குழு தலைவர் தேர்வு, 11 பேர் கொண்ட குழுவை தேர்வு செய்தல் குறித்த ஆலோசனைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கட்சிகளின் வியூகத்திற்கு மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்தது. இந்நிலையில் இந்தாண்டு இறுதியில் மிசோரம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் சட்டீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ், தெலங்கானாவில் பிஆர்எஸ் என, எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக, மிசோரமில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாதம் மக்களவையில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, மிசோரமில் ஆளும் எம்என்எப் கூட்டணி, பாஜகவுக்கு எதிராக வாக்களித்தது. மணிப்பூர் சூழ்நிலையை பாஜக கையாண்ட விதம், கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் போன்ற காரணங்களால், பாஜகவுக்கு எதிரான முடிவு எடுக்கப்பட்டது..

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் வருவதால், ‘இந்தியா’ கூட்டணிக்கு எதிராக வியூகங்களை வகுத்தல் குறித்து பாஜக ஆலோசனை நடத்தி வருகிறது. பாஜக பலவீனமாக உள்ள இடங்களில் கூடுதல் கவனம் செலுத்துதல், முன்கூட்டியே வேட்பாளர்களை அடையாளம் கண்டு களம் இறக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை பாஜகவின் உயர்மட்ட தலைவர்களின் மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடக்கிறது. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் 5 மாநில தேர்தல், அடுத்தாண்டு லோக்சபா தேர்தல்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது

Related Articles

Back to top button
Close
Close