பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து…யாருடையஅலட்சியம்..?
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் தெரிய உள்ளது. ரயில்வே கேட்டை கடக்க முயன்ற ஆச்சாரியா என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வேன் மீது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மோதியதில் வேனில் இருந்த பள்ளிக் குழந்தைகள்உயிரிழந்தனர்.ஒரு மாணவி, ஒரு மாணவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ள நிலையில், காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன், தண்டவாளத்தை கடந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கினர். பள்ளி வேன் மீது ரயில் மோதியதால், கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு பள்ளி வேன் இழுத்து செல்லப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வேனில் இருந்த மாணவர்களின் புத்தகப் பைகள் தண்டவாளத்தில் சிதறி கிடந்துள்ளது அங்கிருந்த மக்கள் மத்தியில் பதைபதைக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அங்கிருந்த மக்கள் ஆவேசமாக ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினர். எத்தனை முறை இங்கு பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று மனு அளித்த போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டை முன் வைத்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், கடந்த கிராம சபை கூட்டத்திலேயே பாலம் கட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றி கொடுத்தீர்கள். அதன்பின் எங்கள் தரப்பிலும் அதற்காக ஒரு குழு அமைத்து, திட்டம் குறித்த மதிப்பீடு அறிக்கை தயாரித்து அனுமதிக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களுக்கு பதில் அளித்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து சிபி ஆதித்ய செந்தில்குமார் பேசுகையில், பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். ரயில்வே துறை சார்பாகவும், காவல்துறை சார்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்படும். கேட் கீப்பரின் அலட்சியம் இந்த விபத்துக்கு காரணமா என்றும் விசாரணை நடத்தப்படும். விசாரணையில் கவனக் குறைவு காரணமாக இருந்தால், நிச்சயமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனி எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.