fbpx
Others

பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றபரிந்துரை..

இந்தியா சமீபத்தில் ஜி20 உச்சி மாநாட்டுக்கு தலைமை வகித்தது. அப்போது அதில் கலந்து கொண்ட வெளிநாட்டு தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அளித்த விருந்தின் அழைப்பிதழில் முதன் முதலாக குடியரசுத் தலைவர் என்பதற்கு பதில் பாரத குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டது. அதன்பின் அந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டது.இந்நிலையில், பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆர்டி)உருவாக்கிய உயர்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து இக்குழுவின் தலைவரும், வரலாற்று ஆராய்ச்சி இந்திய கவுன்சில் உறுப்பினருமான ஐசக்கூறியதாவது: பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றிய மைப்பதற்காக உருவாக்கப்பட்டஎன்சிஇஆர்டி, சமூக அறிவியல் பாடத்துக்கான உயர் நிலைக் குழுவை அமைத்தது. என்சிஇஆர்டி புதிய பாடப் புத்தகங்களில் மாற்றங்களை செய்ய 7 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒருமனதாக பரிந்துரை செய்துள்ளது.அரசியல் சாசனத்தின் 1(1) வது பிரிவில் இந்தியாவின் பெயர் ஏற்கெனவே பாரத் என்று உள்ளது. பாரத் என்பது பழங்கால பெயர். 7,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு புராணம் போன்ற பழங்கால புத்தகங்களில் பாரத் என்ற பெயர் குறிப்பு உள்ளது. கிழக்கு இந்திய கம்பெனி வந்த பின்பும், 1757-ம் ஆண்டு பிளாஸி போருக்குப் பின்புதான் இந்தியா என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது. அதனால், அனைத்து வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களில் இந்தியா என்ற பெயருக்கு பதில் பாரத் என்ற பெயரை பயன்படுத்த வேண்டும் என உயர்நிலைக் குழு ஒருமனதாக பரிந்துரை செய்துள்ளது.அதேபோல் ஆங்கிலேயர்கள் இந்திய வரலாறை பழங்கால, இடைக்கால, நவீன வரலாறு என மூன்று பகுதிகளாக பிரித்தனர். இவை இந்தியாவின் இருண்டகாலம், அறிவியல் அறிவு பற்றிஅறியாதது, முன்னேற்றம் என 3 பகுதிகளை காட்டுகிறது. ஆனால் சூரிய குடும்பத்தில் ஆர்யபட்டாவின் ஆராய்ச்சி உட்பட இந்தியாவின் சாதனைகள் பழங்காலத்திலேயே இடம்பெற்றுள்ளன. அதனால் பழங்கால வரலாற்றுக்கு பதிலாக, இந்திய வரலாற்றின் செம்மைக் காலம் பற்றி பள்ளிகளில் கற்றுக் கொடுக்க நாங்கள் ஆலோசனை வழங்கியுள்ளோம்.மேலும் பாடப் புத்தகங்களில் இந்து வெற்றிகள் பற்றிய வரலாறு இடம் பெறவும் உயர்நிலைக் குழுபரிந்துரை செய்துள்ளது. பாடப் புத்தகங்களில் நமது தோல்விகள் மட்டும் தற்போது இடம் பெற்றுள்ளன. முகலாயர்கள் மற்றும் சுல்தான்களுக்கு எதிரான நமது வெற்றிகள் பாடப் புத்தகங்களில் இல்லை. எனவே இந்து வெற்றிகளின் வரலாறு இடம் பெறவும் பரிந்துரை செய்துள்ளோம். மேலும் அனைத்துபாடத்திட்டங்களிலும் இந்திய அறிவியல் முறையை அறிமுகப்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது.இவ்வாறு ஐசக் தெரிவித்தார்.     தேசிய கல்வி கொள்கை 2020-க்கு ஏற்ப பள்ளி பாடப் புத்தகங்களில் உள்ள பாடத்திட்டங்களை என்சிஇஆர்டி மாற்றியமைத்து வருகிறது. பாடப் புத்தகங்கள் மற்றும் பாடத் திட்டங்களை இறுதி செய்ய என்சிஇஆர்டி பல குழுக்களை உருவாக்கியுள்ளது.இவற்றின் பரிந்துரைப்படி பள்ளிப் பாடத் திட்டங்களில் மாற்றம் செய்வது குறித்து என்சிஇஆர்டி இறுதி முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது.

Related Articles

Back to top button
Close
Close