fbpx
Others

நீக்கம் – நோக்கம் – தாக்கம்….370 சட்டப்பிரிவு…

இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 370 – ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தைக் கொடுக்கக் கூடிய பிரிவு – ஆகஸ்ட் 5-ம் தேதி 2019-ம் ஆண்டு நீக்கப்பட்டது. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இந்த நீக்கத்தை எதிர்த்தன. ஆனால், ஒரு சில கட்சிகள் இதனை வெளிப்படையாக ஏற்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் தத்தளித்தன. இந்த நீக்கம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு இப்போது வெளியாகியுள்ளது.காஷ்மீருக்கான 370 பிரிவை நீக்க வேண்டும் என்பது பாரதிய ஜனதா கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை மற்றும் தேர்தல் வாக்குறுதியுமாகும். ஆகவே, தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளதை மக்கள் ஏற்றுக் கொண்டு எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை அளித்தனர். அதனால் வாக்குறுதியை நிறைவேற்றினோம் என்று ஆளும் கட்சி கூறலாம். ஒரு மாநிலத்தின் தலைவிதியைப் பிற மாநில மக்கள் நிர்ணயிப்பதை ஏற்றுக் கொள்ளலாமா என்ற கேள்வியை இங்கே யாருமே எழுப்பப் போவதில்லை.  நீக்க வேண்டும் என்று பாஜக கோருவதற்கும் தொடர வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகள் கூறுவதற்கும் அடிப்படைக் காரணம் என்னவென்று தெரிய வேண்டுமானால் இந்த 370 பிரிவு வழங்கிய சலுகைகள் என்னவென்று சுருக்கமாகவாவது தெரிந்து கொள்ள வேண்டும்.‘‘இந்திய நாட்டுக்காக நாடாளுமன்றத்தால் உருவாக்கப்படும் எந்த சட்டமும் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் – ஜம்மு & காஷ்மீர் தவிர. ஒரு இந்தியக் குடிமகன் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் குடியேறவும், வேலை பார்க்கவும், தொழில் செய்யவும், நிலம், வீடு வாங்கவும் (ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளை தவிர) அரசியல் சட்டம் உறுதி செய்கிறது. ஆனால், ஜம்மு & காஷ்மீரில் முடியாது. பட்டியலின மக்களுக்காக கல்வி, வேலை வாய்ப்புக்களில் இடஒதுக்கீடு என்பது இந்தியா முழுமைக்கும் இருந்தாலும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் இதைப் பற்றிப் பேச முடியாது. இந்தியாவெங்கும் கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்தாலும் ஜம்மு & காஷ்மீரில் இது செல்லுபடியாகாது. இந்திய அரசியல் சட்டம்தான் பிரதானமானது என்பது நமக்குத் தெரியும், ஆனால் ஜம்மு & காஷ்மீர் மாநிலம் மட்டுமே தனக்கென தனியான அரசியல் சட்டத்தைக் கொண்ட மாநிலம் என்பது தெரியுமா? இந்தியாவுக்கு ஒரு பிரதமர் மட்டுமே என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால், இந்தியாவுடன் இணைந்து பல ஆண்டுகளான பின்னரும் ஜம்மு & காஷ்மீரை ஆட்சி செய்பவரும் பிரதமர் என்றே அழைக்கப்பட்டார், 1965வரைக்கும் என்பது தெரியுமா”.  இவை எல்லாம் ஒரே தேசம் என்ற கோட்பாட்டுக்கு எதிரானது, ஜம்மு & காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக இணைத்துக் கொள்ள தடையாக இருக்கிறது, பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறது என்பது பாஜக.வின் வாதம். ஆனால், எதிர்க்கட்சிகளின் வாதம்? காஷ்மீரின் தனித்தன்மையும் கலாச்சாரமும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இந்த சிறப்பு அந்தஸ்து தொடர வேண்டியது அவசியம். காஷ்மீர் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டுமானால் இந்த சிறப்பு அந்தஸ்து தொடர வேண்டும்.காஷ்மீரிகளின் தனித்தன்மை, கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் – அப்படியென்றால் தமிழர்களுக்கு, மலையாளிகளுக்கு, தெலுங்கர்களுக்கு என்று கலாச்சாரம், தனித்தன்மை இவை எல்லாம் கிடையாதா? இந்தியாவெங்கும் எந்த மாநிலத்தவரும் எந்த மொழி பேசுபவரும் குடியேறலாம் எனும் போது பாதிக்கப்படாத கலாச்சாரமும் தனித்தன்மையும் காஷ்மீரத்தில் மட்டும் எப்படி பாதிக்கப்படும்? அதேபோல காஷ்மீரிகள் இந்தியாவின் பிற மாநிலங்கள் அனைத்திலும் குடியேறியிருக்கின்றனர் – நம் தமிழகத்திலும் சென்னையிலும் கூட. தம்மைச் சுற்றி தமிழ்க் கலாச்சாரம் நிலவுகின்ற போதும் அழியாத காஷ்மீர கலாச்சாரம் இங்கிருந்து தமிழர்கள் காஷ்மீரத்தில் குடியேறினால் அழிந்து விடுமா? என் மாநிலத்தில் நீ குடியேறலாம், ஆனால், உன் மாநிலத்தில் நான் குடியேற முடியாது என்பது எப்படி சமத்துவமாக இருக்க முடியும்? பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம் என்று கூறும் எதிர்க்கட்சிகள், காஷ்மீரில் மட்டும் ஒருமைத்தன்மையே இருக்க வேண்டும் என்பதற்கான காரணத்தைத் தெரிவிக்க முடியுமா? இந்தியாவின் பிற மாநிலத்தவர் குடியேறினால் தங்களது தனித்தன்மை பாதிக்கப்படும் என்று கோஷமிடும் காஷ்மீரின் மாநிலக் கட்சிகள், மியான்மரில் இருந்து வருகின்ற ரோஹிங்கியாக்களை ஏற்றுக் கொள்வதில் எந்தத் தயக்கமும்காட்டவில்லையே ஏன்? அகதிகள் என்போர் போர், பஞ்சம் போன்ற காரணங்களால் எல்லையைத் தாண்டி அண்டை நாட்டில் குடியேறுவோர். ஆனால், மியான்மரின் எல்லை ஜம்மு & காஷ்மீரைத் தொடவில்லையே? பிறகு ரோஹிங்கியா முஸ்லிம்களை அகதிகள் என்று கூறமுடியுமா?

பட்டியலின மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புக்கள், தேர்தல்களில் இடஒதுக்கீடு என்பது ஜம்மு & காஷ்மீருக்குப் பொருந்தாது என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஒருவேளை காஷ்மீரில் முஸ்லிம்கள்தான் பெரும்பான்மை, இஸ்லாமிய சமூகத்தில் ஜாதிப் பிரிவுகள் கிடையாது என்பதால் அங்கு இடஒதுக்கீட்டுக்கான அவசியம் தேவையில்லை என்று யாராவது கூறினால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு என்பது பல மாநிலங்களில் நடைமுறையில் இருக்கின்றது என்பது தெரியுமா?ஏழைக் குழந்தைகளின் கல்வி மறுக்கப்படக் கூடாது என்பதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் கல்வி உரிமைச் சட்டம். ஆனால், இது ஜம்மு & காஷ்மீரில் செல்லுபடியாகாது என்றால் காஷ்மீரில் கல்வி தேவையில்லை என்று அர்த்தமா அல்லது காஷ்மீரில் ஏழைகளே இல்லை என்று அர்த்தமா?காஷ்மீர் மாநிலக் கட்சிகள் மற்றும் ஒரு சில எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரைக்கும் காஷ்மீரின் தனித்தன்மை, கலாச்சாரம் என்ற கோஷத்திற்குப் பின்னால் ஒளிந்திருப்பது மதவாதமும் அடிப்படைவாதமும்தான். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டால் பிற மதத்தினர் அங்கே குடியேறுவது அதிகரித்து விட்டால் முஸ்லிம் மெஜாரிட்டி என்பது கேள்விக்குறியாகி விடுமோ என்ற தேவையில்லாத பயம்தான் இவர்களின் எதிர்ப்புக்குக் காரணம். இவ்வாறாக எதிர்ப்பைக் காட்டுவதன் மூலம் நாங்கள்தான் இஸ்லாமியர்களுக்கு ஆதரவானவர்கள் என்று காட்டிக் கொண்டு நாட்டின் பிற பகுதிகளில் வாக்கு வங்கி அரசியலைத் தொடரலாம் என்பதும் இன்னொரு முக்கிய காரணம்.அரசியல் சட்டப்பிரிவு 370. இதுவரைக்கும் காஷ்மீரத்துக்கு மத்திய அரசால் பல்லாயிரம் கோடிகள் நிதி ஒதுக்கப்பட்ட போதிலும் அதற்கேற்ற வளர்ச்சியோ வேலைவாய்ப்புகளோ அங்கே உருவாகவில்லை. இதற்கு அங்கே ஆட்சியில் இருந்த மாநிலக் கட்சிகளும் அவற்றுக்கெதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களும் ஒரு காரணம். இந்த நிலையில் 370 பிரிவு நீக்கப்பட்ட பிறகு முதலீடுகள் வர ஆரம்பித்திருக்கின்றன. வேலைவாய்ப்புக்கள் அதிகரித்திருக்கின்றன. அமைதி திரும்பியிருக்கிறது, கல்வீச்சு சம்பவங்கள் பெருமளவில் குறைந்திருக்கின்றன.இறையாண்மை என்பது இந்தியாவுக்கு மட்டும்தான். சுய நிர்ணய உரிமையோ பிரிந்து போகும் உரிமையோ இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் எக்காலத்திலும் இல்லை. இதைத்தான் அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் சட்டம் கூறுகின்றது. இதையேதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு வரலாற்றுத் தவறு – அரசியல் காரணங்களுக்காக சரி செய்யப்படாமல் இருந்தது. கடந்த 2019-ல் அது திருத்தப்பட்டது. அரசியல் காரணங்களுக்காகத்தான் நீக்கினார்கள் என்று குற்றம் சாட்டினாலும் தவறைத் திருத்துவது தவறா?

Related Articles

Back to top button
Close
Close