fbpx
Others

நாகர்கோவில் — காங். – பாஜ மோதல் 53 பேர்மீது வழக்கு.

: நாகர்கோவிலில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே நேற்று ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 53 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு கட்சி அலுவலகங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்பி பதவி நீக்கத்தை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்திவருகின்றனர்.   நாகர்கோவிலில் நேற்று (திங்கள்) மாலை 4.30 மணியளவில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், இளைஞர் காங்கிரஸ் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் டைசன் உள்ளிட்ட இளைஞர் காங்கிரசை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள், காவல்துறையின் அனுமதியின்றி செட்டிக்குளம் சந்திப்பில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் ஊர்வலமாக சென்றனர். பின்னர், அந்த சாலையில் உள்ள பாஜ மாவட்ட அலுவலகம் முன் அமர்ந்து சாலை மறியல் செய்து, பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அந்த சமயத்தில், பாஜ அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. திடீரென கட்சி அலுவலகத்துக்கு வெளியே காங்கிரசார் கோஷங்கள் எழுப்பியதை தொடர்ந்து, கூட்டத்தை நிறுத்தி விட்டு வெளியே வந்த பாரதிய ஜனதா நிர்வாகிகள் காங்கிரசாருடன் வாக்குவாதம் செய்தனர். திடீரென இரு தரப்புக்கும் கை கலப்பு ஏற்பட்டு, மோதலாக வெடித்தது. சரமாரியாக கற்களையும் வீசினர். அந்த பகுதியே போர்க்களம் போல் மாறியது. இதில் இரு தரப்பை சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து காங்கிரஸ் தரப்பில் 31 பேர் மீதும், பாஜ தரப்பில் 22 பேர் மீதும் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சி தரப்பில் டைசன், ஜோஸ் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாரதிய ஜனதா தரப்பில் மகாராஜன், சொக்கலிங்கம் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகம், காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..

Related Articles

Back to top button
Close
Close