fbpx
Others

 தொடர்மழை/ வைகை தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

 தொடர்மழை மற்றும் வைகை தண்ணீர் திறப்பு காரணமாக திருமங்கலம் தாலுகாவில் உள்ள பொன்னமங்கலம் கண்மாய் மற்றும் மேலேந்தல் கண்மாய்கள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருமங்கலம் தாலுகாவில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வந்தது. இதனால் கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. மழை மற்றும் வைகையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரால் இந்த தாலுகாவில் உள்ள பொன்னமங்கலம் பெரியகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய துவங்கியுள்ளது.பொன்னமங்கலம் கிராமத்திற்கு அருகேயுள்ள ஜோதிமாணிக்கம் கண்மாய் நிரம்பி உபரிநீர் கால்வாய் வழியாக கடந்த ஒருவார காலமாக பொன்னமங்கலம் கண்மாய்க்கு வந்து கொண்டிருந்தது. இதனால் நேற்று முன்தினம் பொன்னமங்கலம் கண்மாய் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. தொடர்ந்து உபரிநீர் கண்மாயின் கிழக்கு பகுதி வழியாக மறுகால் பாய்ந்து வெளியேறி அருகேயுள்ள ஜோசியர் ஆலங்குளம் கண்மாய்க்கு செல்ல துவங்கியுள்ளது. இதே போல் பொன்னமங்கலம் கிராமத்தின் அருகேயுள்ள மேலேந்தல் கண்மாயும் நிரம்பி வழிகிறது.இந்த கண்மாய்க்கு பொன்னமங்கலம் கண்மாயின் மேற்கு பகுதியிலுள்ள மறுகால் மூலமாக வெளியேறும் நீர் வருவதால் மேலேந்தல் கண்மாயும் நேற்று நிரம்பியது. இந்த கண்மாயின் உபரிநீர் மறுகால் வழியாக உரப்பனூர் கண்மாய்க்கு செல்கிறது. இதுதவிர பொன்னமங்கலத்தை அடுத்துள்ள திருமங்கலம் தாலுகாவின் கடைசி எல்லை கிராமமான வாகைகுளம் கிராமத்தில் உள்ள கண்மாயும் நிரம்பியுள்ளது. திருமங்கலம் பகுதியில் அடுத்தடுத்துள்ள கண்மாய்கள் நிரம்பி வருவதால் கண்மாய்கரைகளை கண்காணித்து வரும்படி பொதுபணித்துறை, வருவாய்த்துறை மற்றும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தாலுகாவில் கண்மாய்கள் தொடர்ந்து நிரம்பி வருவதால் திருமங்கலம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்தாண்டு பெய்த மழையால் பல்வேறு கண்மாய்கள் நிரம்பியதால் திருமங்கலம் பகுதியில் விவசாயம் அதிகளவில் நடைபெற்றது. அதே போல் இந்தாண்டும் கண்மாய்கள் நிரம்பி வருவதால் நெல், கரும்பு, சோளம், மக்காசோளம், பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் ..

Related Articles

Back to top button
Close
Close