fbpx
Others

தாயை பிரிந்து தவித்த தர்மபுரி யானைக்குட்டி பாகன்பொம்மனிடம் ஒப்படைப்பு.

 தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனச்சரகத்தில் கடந்த 11ம் தேதி தாயை பிரிந்து வனத்தை விட்டு வெளியேறிய சுமார் 1 வயதுடைய ஆண் யானை குட்டி, பென்னாகரம் அருகே நீர்குந்தி பகுதியில் உள்ள விளைநிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் தீயணைப்புத்துறை உதவியுடன் குட்டி யானையை கயிறு கட்டி மீட்டனர். இந்த யானைக்குட்டியின் தாய் யானையை கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்த நிலையில், மீட்கப்பட்ட யானைக்குட்டி ஒகேனக்கல் வனப்பகுதியில், வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வந்தது.  தாய் யானையிடம் குட்டி யானையை சேர்க்க முடியாமல் போன நிலையில், அதை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வனத்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். அந்த யானைக்குட்டியை அழைத்து செல்ல ஆஸ்கர் விருது பெற்ற ‘எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்றிருந்த பாகன் பொம்மன் சென்றிருந்தார். இதையடுத்து கூடாரம் அமைக்கப்பட்ட சரக்கு வாகனத்தில் யானைக்குட்டி ஏற்றப்பட்டு நேற்று முன்தினம் மாலை ஒகேனக்கல்லில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வழியாக முதுமலை, தெப்பக்காடு முகாமிற்கு நள்ளிரவில் வந்து சேர்ந்தது. குட்டி யானைக்கு வழிபாடு நடத்தி வரவேற்றனர்.   தொடர்ந்து முகாமில் உள்ள கிராலில் (மரக்கூண்டு) யானைக்குட்டி அடைக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது இந்த யானை குட்டியை பாகன் பொம்மன் பராமரித்து வருகிறார். ஏற்கனவே 2 யானைக்குட்டிகளை பொம்மன், பெள்ளி தம்பதி வளர்த்து பராமரித்துள்ளனர். தற்போது பொம்மனுடன் சேர்ந்து இந்த யானைக்குட்டியையும் பராமரிக்கும் பணியில் அவரது மனைவி பெள்ளியையும் சேர்க்கலாமா? என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர் .

Related Articles

Back to top button
Close
Close