fbpx
Others

தலைமை செயலாளர் அறிக்கை அளிக்க—மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: அரியலூர் கலெக்டர் சாதிய வன்மத்துடன் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தலைமை செயலாளர் விசாரணை மேற்கொண்டு 2 வாரத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றும் ரமண சரஸ்வதி பற்றி பத்திரிகைகளில் செய்திவெளியானது. அதில், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அலுவலர்களை உருவ கேளிக்கை செய்வது, நீங்கள் இந்த பதவிக்கே தகுதியற்றவர்கள் என தரம் தாழ்த்துவது, தகுதி நீக்கம் செய்வது, 17 ஏ குற்றச்சாட்டு ஏற்படுத்துவது, அனைவரின் முன் அவமானப்படுத்தும் நோக்கத்துடன் நடந்து கொள்வது என தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அலுவலர்களை தரக்குறைவாக நடத்தி வருவதாக ஊழியர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இவரது சாதிய வன்ம அதிகார போக்கினால் பாதிக்கப்பட்ட வட்டாட்சியர், தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். அதைப்போன்று வட்டார வளர்ச்சி அலுவலரை அனைவரின் முன்னிலையிலும் அடிப்பதற்காக கையை ஓங்கியுள்ளார்.
மாவட்ட நிலை அலுவலர் ஒருவரின் பைலை மற்ற ஊழியர்கள் முன்னிலையில் துக்கி எரிந்து அவமானப்படுத்தியுள்ளார். இதனால் வருவாய் துறையினர் நாளுக்கு நாள் மாவட்ட ஆட்சியரின் சாதிய வன்மத்தால் பாதிக்கப்படுகின்றனர். காவல் துறையினரையும் கேவலமாக நடத்துகிறார். ஒவ்வொரு நாளும், இவரும், இவரது உதவியாளர் பிரபாகரும் தாழ்த்தப்பட்ட அலுவலர்களை கேளி கிண்டல் செய்து சந்தோசம் அடைவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஒரு முறை மாவட்ட வருவாய்துறை (தனி) அலுவலரை ஒருமையில் பேசி சாதி வன்மத்துடன் உருவ கேளிக்கை செய்து சீட்டில் அமர விடாமல் ஒரு மணி நேரமாக நிற்க வைத்ததுடன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி 17 ஏ வழங்க பரிந்துரை செய்துள்ளார்.
இவ்வாறாக இவரது சாதிய வன்மத்தால் இதுவரை 3 டிஆர்ஓக்கள் பணி நியமனம் செய்தும் பதவியற்கவே தயங்கி வருவதாக கூறுகின்றனர். எனவே தமிழக அரசும், தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையம் முறையாக விசாரணை மேற்கொண்டு அரியலூர் மாவட்ட ஆட்சியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது. இச்செய்தியை படித்து பார்த்த மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தலைமை செயலாளர் உரிய விசாரணை மேற்கொண்டு 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்

Related Articles

Back to top button
Close
Close